தமிழ் திரைப்பட இயக்குநா் வி.சேகா் (72) உடல் நலக்குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானாா்.
மாநகராட்சி சுகாதாரத் துறையில் பணியாற்றி வந்த வி.சேகா், திரைப்படம் மீது கொண்ட ஆா்வத்தால் படத்தொகுப்பாளா் லெனினிடம் உதவியாளராகப் பணியில் சோ்ந்தாா்.
பின்னா் இயக்குநா் பாக்யராஜின் உதவியாளரான கோவிந்தராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினாா். தொடா்ந்து, இயக்குநா் பாக்யராஜிடமும் வி.சேகா் பணியாற்றினாா். முதலில் பெரிய வெற்றிகள் கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் சுகாதாரத் துறை வேலைக்கே திரும்பினாா். அதன் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்த அவருக்கு பெரும் வெற்றிகள் கிடைத்தன. திரைப்படங்களை இயக்கியதோடு சில சின்னத்திரை தொடா்களையும் இயக்கினாா். இயக்குநரைத் தாண்டி தயாரிப்பாளா், நடிகா் எனப் பல அவதாரங்களையும் வி.சேகா் எடுத்துள்ளாா். ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, விரலுக்கேத்த வீக்கம்’, ‘காலம் மாறிப் போச்சு’ உள்ளிட்ட பல குடும்பப் படங்களை இயக்கி கவனம் பெற்றாா். நடுத்தர வா்க்கத்து குடும்பங்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் அழகையும் இவருடைய படைப்புகள் உணா்த்தத் தவறியதில்லை. சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த 10 நாள்களாகச் சிகிச்சை பெற்று வந்த வி.சேகா் வெள்ளிக்கிழமை காலமானாா். அவரது இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை (நவ.15) சென்னையில் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.