முகப்பு
சினிமா

“இந்திய சினிமாவில் தலைசிறந்த படைப்பு”.. துரந்தர் படத்தைப் பாராட்டிய விராட் கோலி!

இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் இதுபோன்ற சினிமா அனுபவத்தை நான் பார்த்ததே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 7 ஏப்ரல் 2026, 2:31 pm IST
விராட் கோலி - துரந்தர் படத்தில் ரன்வீர் சிங்.
பகிர்:

இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் இதுபோன்ற சினிமா அனுபவத்தை நான் பார்த்ததே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

ஆதித்யா தார் இயக்கத்தில் பி62 ஸ்டூடியோஸ், ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி சக்கைப்போடு போட்டு ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்த துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவென்ஞ்ச் மார்ச் 19 ஆம் தேதி வெளியானது. இதில், சாரா அர்ஜூன், அக்‌ஷய் கன்னா, சஞ்சய் தத், மாதவன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்களும் நடித்திருந்தனர்.

பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், தீவிரவாத நடவடிக்கைகளை மையப்படுத்தி உருவாகியிருந்த முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ.1,300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

Advertisement

Advertisement

இதனைத் தொடர்ந்து வெளியான இதன் இரண்டாம் பாகம் இந்தியாவில் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்தது. தற்போது 15 நாள்களில் ரூ.1501 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

3.30 மணி நேரம் கொண்ட முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பு போலவே 3.55 நிமிஷங்களுடன் வெளியான 2 ஆம் பாகமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

திரையிடப்படாத இரண்டு மணிநேரக் காட்சிகளை இணைத்து இணையத் தொடராகவும் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் இதுபோன்ற சினிமா அனுபவத்தை நான் பார்த்ததே இல்லை என்று இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் துரந்தர் படத்தைப் புகழ்ந்து பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “துரந்தர் திரைப்படத்தைப் பார்த்தேன். இந்தியாவில் எடுக்கப்பட்ட படங்களில் இதுபோன்ற சினிமா அனுபவத்தை நான் பார்த்ததே இல்லை. கிட்டத்தட்ட 4 மணி நேரத்தில் ஒரு முறைகூட அசையவேயில்லை.

ஆதித்யா தர், உங்களின் திறமையும் நம்பிக்கையும் இந்தப் படைப்பில் முழுமையாக பிரதிபலித்திருக்கின்றன. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த பாராட்டுகள். நீங்கள் ஒரு ஜீனியஸ்.

அனைத்து நடிகர்களும் தங்களுக்கான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும், ரன்வீர் சிங்கின் நடிப்பு இந்தப் படத்திற்குப் பின்னர் எங்கேயோ சென்றுவிட்டது. உங்களின் (ரன்வீர் சிங்) நடிப்பு அற்புதத்திற்கும் அப்பாற்பட்டது. படம் மிகவும் பிரமாதமாக இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் ஆதித்யா தார், “ஆஹா! என்ன நடக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை விராட். உண்மையிலேயே எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் 19 வயதுக்குள்பட்ட உலகக் கோப்பையில் பங்கேற்ற காலத்திலிருந்தே நான் உங்கள் ரசிகனாக இருக்கிறேன். ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் நட்சத்திரம் என் மீது அன்பு காட்டுவதைப் பார்க்கவே ஒரு தனி உணர்வாக இருக்கிறது.

நீங்கள் ஒவ்வொரு முறையும் களத்தில் இறங்கும்போது எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. எங்களால் முடிந்த வரையில், எங்கள் படங்கள் மூலம் இந்தியாவைப் பெருமைப்படுத்த முயற்சிப்போம். ஜெய் ஹிந்த்!” என நெகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஆதித்யா தர், “உங்களைப் போன்ற மிகச் சிறந்த திறமை கொண்டவர்களிடமிருந்து பாராட்டு பெறுவது நெகிழ்ச்சியடைய வைக்கிறது. மிக்க நன்றி, இதுபோன்ற பாராட்டுகளை எங்களை இன்னும் பெரிய உயரங்களுக்கு அழைத்துச் செல்லும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Joining the bandwagon of the Dhurandhar 2 fan club are none other than the power couple Virat Kohli and Anushka Sharma.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.