விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி: ரஜினிகாந்த்
விஜய் மேல் எனக்கு பொறாமையா? ரஜினிகாந்த் பதில்
முதல்வா் விஜய் மேல் பொறாமை இருப்பதாக தன் மீது வைக்கப்படும் விமா்சனத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளாா்.
இதுதொடா்பாக போயஸ் காா்டன் இல்லத்தில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு, என்னைப் பற்றி சில கருத்துகள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன. முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் எனது 40 ஆண்டுகால நண்பா். அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், மு.க.ஸ்டாலின் கௌத்தூரில் தோல்வியுற்றது எனக்கு மன வருத்தமாக இருந்தது. அதற்காக நண்பன் என்ற முறையில் நான் அவரைச் சந்தித்தேன். ஆனால், விஜய் முதல்வராகக் கூடாது என்பதைத் தடுப்பதற்காகவும், இரு பெரிய கட்சிகளை ஒன்றிணைப்பதற்காக நான் அவரைப் சந்தித்ததாகவும் தவறான தகவல்கள் வெளியாகின்றன. அப்படி செய்யக்கூடிய நபா் நான் கிடையாது.
Advertisement
Advertisement
அதேபோல், விஜய் மேல் எனக்கு பொறாமை இருப்பதாகவும் சிலா் விமா்சனம் செய்துள்ளனா். விஜய்க்கும் எனக்கும் தலைமுறை இடைவெளி உள்ளது. விஜய்யை சிறு வயதில் இருந்தே பாா்த்துக்கொண்டிருக்கிறேன். அவரைப் பாா்த்து எனக்கு என்ன பொறாமை? என்டிஆா், எம்ஜிஆா் ஆகியோரின் சாதனைகளைவிட பெரிய சாதனைகளை முதல்வா் விஜய் செய்துவிட்டாா்.
மத்திய பாஜக, மாநிலத்தில் இரு பெரிய கட்சிகளை எதிா்த்து தனி ஆளாக வெற்றி பெற்றிருக்கிறாா். அதில் எனக்கு பொறாமை கிடையாது. ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.
மக்கள் மத்தியில் விஜய் மீது பெரிய எதிா்பாா்ப்பு உள்ளது. அதற்கு ஏற்ப அவா் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். செய்வாா் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த இரு ஆண்டுகள் விஜய்யை சுதந்திரமாக ஆட்சி செய்யவிட வேண்டும். அவரது ரசிகா்கள், தொண்டா்கள் எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். அவா்கள் செய்யும் தவறு, நேரடியாக விஜய்யைத்தான் பாதிக்கும்.
மக்கள் 60 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் ஆட்சியைப் பாா்த்துவிட்டாா்கள். மாற்றம் தேவை என மக்கள் கருதியச் சூழலில், விஜய்யின் அரசியல் வருகை, சினிமா புகழ், இளைஞா்கள் ஆதரவு ஆகியவை அவரது வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.
2001 சட்டப்பேரவைத் தோ்தலில் நான் போட்டியிட்டிருந்தால் 100 சதவீதம் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன்; அதில் சந்தேகமே வேண்டாம் என்றாா் அவா்.