மகேஷ் பாபு நடிக்கும் படம் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் பேட்டி
ஒவ்வொரு காட்சியும் இருதடவை படமாக்கப்படுகிறது. நடிகர்களும் அவரவர் சொந்தக் குரலிலேயே பேசுகிறார்கள்...
சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் அகிரா என்கிற ஹிந்திப் படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், அடுத்ததாக தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவுடனான தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக உள்ள படத்தை இயக்குகிறார். இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். மகேஷ் பாபு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா இடம்பெறுகிறார். இசை - ஹாரிஸ் ஜெயராஜ்.
மகேஷ் பாபுவுடன் இணைவது குறித்து முருகதாஸ் கூறியதாவது: இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகிறது. ஒவ்வொரு காட்சியும் இருதடவை படமாக்கப்படுகிறது. நடிகர்களும் அவரவர் சொந்தக் குரலிலேயே பேசுகிறார்கள். மகேஷ் பாபுவும் தமிழில் சொந்தக் குரலில் பேசுகிறார். அவர் இந்தப் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு இப்போதுதான் தொடங்கியுள்ளேன். எனவே என் படங்களில் அதிக பட்ஜெட் கொண்ட படமா என இனிமேல்தான் தெரியும். ஆனால் சமீபத்தில் வெளியான அகிரா, என் படங்களிலேயே குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட படம்.
9 வருடங்கள் கழித்து (சிரஞ்சீவில் நடித்த ஸ்டாலின் படத்துக்குப் பிறகு) தெலுங்குப் படம் இயக்குகிறேன். இனிமேல் நான் இருமொழிப் படங்களில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தெலுங்கில் படங்கள் தயாரிக்கவும் வாய்ப்பு உண்டு. ரசிகரின் பார்வையில் என் படத்தை இயக்குவதால் என்னால் தொடர்ந்து வெற்றிப் படங்ளைத் தரமுடிகிறது என்றார்.