சென்னை: தனது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் `விஐபி 2' படத்தின் இறுதிநாள் படப்பிடிப்புக்கு சர்ப்ரைசாக வருகை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
நடிகர் தனுஷின் நடிப்பில் கடந்த 2014-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'வேலையில்லாப் பட்டதாரி (வி.ஐ.பி)'. இதன் இரண்டாம் பாகமான `விஐபி 2' சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது.
தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் கலைப்புலி எஸ்.தாணுவின் `வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பிரபல இந்தி நடிகை கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கஜோல் நடித்துள்ள தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வரும் ஜுலை 14-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நேற்று சென்னையின் புறநகர் பகுதியான போரூரில் நடைபெற்றது. கடைசி நாள் படப்பிடிப்பின் போது பாடல் ஒன்றை படமாக்கி கொண்டிருந்தார்கள். அப்பொழுது படக்குழுவினருக்கு சந்தோஷ அதிர்ச்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று பார்த்து வாழ்த்தி உள்ளார்.
இந்த தகவலை நடிகர் தனுஷ் மற்றும் சவுந்தர்யா ரஜினிகாந்த் அவர்களது டுவிட்டர் பக்கங்களில் தெரிவித்துள்ளனர். சவுந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், 'சூப்பர் ஸ்டாரும், எனது அப்பாவுமான ரஜினிகாந்த் `விஐபி 2' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் பங்கேற்று வாழ்த்தினார். இதை விட சிறந்த ஒரு விஷயத்தை இனி என் வாழ்வில் பெற முடியாது' என்று குறிப்பிட்டுள்ளார். கடைசி நாளில் தலைவரின் ஆசி கிடைத்தது சிறப்பு என்று தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.