முகப்பு
செய்திகள்

தாதா சாகேப் பால்கே விருது: கே.விஸ்வநாத்துக்கு ரஜினி, கமல் வாழ்த்து!

பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

Updated On : 27 ஏப்ரல், 2017 at 12:23 PM
பகிர்:

பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

திரைத் துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கெளரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

சத்யஜித் ரே, பிருத்விராஜ் கபூர், நாகிரெட்டி, எல்.வி.பிரசாத், ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே.பாலசந்தர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் பலரின் புகழுக்கு தாதா சாகேப் விருது அணி சேர்த்துள்ளது.

Advertisement

இந்நிலையில், 2016-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இம்முறை சர்வதேச அளவில் புகழ்பெற்ற பல திரைப்படங்களை இயக்கிய கே.விஸ்வநாத்துக்கு அவ்விருது கிடைத்துள்ளது.

அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறும் தேசியத் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தாதா சாகேப் பால்கே விருதை விஸ்வநாத்துக்கு வழங்க உள்ளார். அப்போது, தங்கத் தாமரை பதக்கம் மற்றும் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அவருக்கு வழங்கப்படும்.

தாதா சாகேப் பால்கே விருது பெறவுள்ள இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து ரஜினிகாந்த், ட்விட்டரில் தெரிவித்ததாவது: தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த கெளரவத்துக்கு, 'மரியாதைக்குரிய எனது சல்யூட் கே.விஸ்வநாத் ஜி' என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

கமலும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: இந்த விருது அறிவிப்பு குறித்து கேட்டவுடன், நான் அதிர்ஷ்டமானவன் என்று அவர் பணிவுடன் கூறுவார். உண்மையில் இந்தியர்கள்தான் அதிர்ஷ்டம் செய்தவர்கள். நானும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.