ரத்தான காலைக்காட்சி: தமிழ் பாகுபலி 2 தமிழகத்தில் வெளியானது!
தமிழ் பாகுபலி 2 படத்தின் காலைக்காட்சி இன்று எதிர்பாராதவிதமாக ரத்தானது. இந்நிலையில் காலை 10 மணி முதல்
தமிழ் பாகுபலி 2 படத்தின் காலைக்காட்சி இன்று எதிர்பாராதவிதமாக ரத்தானது. இந்நிலையில் காலை 10 மணி முதல் தமிழகமெங்கும் பாகுபலி 2 வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பாகுபலி- 2 படத்தின் திரையிடும் உரிமையை முடக்கக் கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா நகரைச் சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் தாக்கல் செய்த மனு விவரம்: 'கே' புரொடக்ஷன் நிறுவன உரிமையாளர் எஸ்.என்.ராஜராஜன், என்னிடம் கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை பல தவணைகளில் ரூ.1.11 கோடியைக் கடனாகப் பெற்றார். இந்தக் கடனை அவர் திருப்பிச் செலுத்தமுடியவில்லை. அவருக்குக் கொடுத்த கடன் தொகை வட்டியுடன் ரூ.1.48 கோடி. இந்நிலையில், பாகுபலி -2 என்ற திரைப்படத்தின் உரிமைகளை அவர் பெற்றுள்ளார். இந்த உரிமைகளைப் பெற போதியளவில் நிதி உதவி அளித்துள்ளேன். என்னிடம் பெற்ற கடன் தொகையைக் கேட்டபோது, எனக்கு வங்கிக் காசோலை வழங்கினார். அந்தக் காசோலையை வங்கியில் செலுத்தியபோது, அவரது வங்கிக் கணக்கு முடிக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எனவே, எனக்குத் தர வேண்டிய தொகைக்கு சொத்து உத்தரவாதம் வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல், தமிழகத்தில் பாகுபலி-2 படத்தை வெளியிடக்கூடாது. மேலும் படம் வெளியிடுவதை முடக்கி வைக்க உத்தரவிட வேண்டும் என, மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பாகுபலி 2 படம் நாளை வெளிவர எந்தத் தடையும் இல்லை என்று உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
Advertisement
சென்னைப் புறநகர் மற்றும் இதர பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் காலை 4 மணிக்கு தமிழ் பாகுபலி 2 படத்தின் முதல் காட்சி ஆரம்பமாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் - விநியோகஸ்தர் இடையேயான சிக்கலுக்கு இன்றும் தீர்வு கிடைக்காததால் காலைக்காட்சி இன்று எதிர்பாராதவிதமாக ரத்தானது.
இந்நிலையில் இப்படம் இணையத்தில் வேறு வெளியாகி தயாரிப்பாளருக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது. ஆனால் தெலுங்கு பாகுபலி 2 தமிழ்நாட்டில் எந்தச் சிக்கலும் இன்றி காலையில் வெளியானது.
கடைசியில், இரு தரப்பினரிடையே ஒருவழியாக சமரசம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 650 திரையரங்குகளில் காலை 10 மணி முதல் தமிழ் பாகுபலி-2 வெளியாகியுள்ளது.