நீண்ட நாள்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன் என நடிகர் பார்த்திபன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: கமல், ரஜினி இருவருக்கும் ரசிகன் நான். அதிலும் ரஜினி எனக்கு மிக நெருக்கமான நண்பர். என் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர். தயாரிப்பாளர்களிடம் பார்த்திபனை கதாநாயகனாக போட்டுப் படம் எடுங்கள் எனத் தூண்டியவர். என்னுடைய கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை பார்த்து மெச்சியவர். அவருடன் விவாதங்களில், என் எதிர்க் கருத்தை ரசித்து மதிப்பவர். சமீபத்திய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்கச் சொன்னதேயன்றி அவரது ரசிகர்களைப் புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படியானால் அது என்னையும் தானே புண்படுத்தும்.
இதே கேள்விகளுக்கு இதே பதில்களை இதே சிரிப்புடன் போன மாதமும் சொன்னேன்; சிறு சலசலப்புமில்லை. ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஒரு அரசியலைக் கிண்டியிருப்பதை அறிகிறேன்.
இருவரையும் ஆதரிப்பேன்: இருவரும் (ரஜினி, கமல்) அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பேன். காரணம்,அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும். ஆனால் விமர்சிப்பது தனிமனித உரிமை. பொதுவாழ்வில் விமர்சனங்களை எதிர் கொள்ள இன்னும் தொண்டர்களாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும் பலர் ரஜினியின் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் "நீங்களுமா?' என அதிர்ந்திருக்கிறார்கள்.
அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாகத் தெரிவிக்கிறேன். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.