முகப்பு
செய்திகள்

மணிரத்னம் படத்துக்கான பயிற்சிப் பட்டறையில் இணைந்த சிம்பு!

காற்று வெளியிடை படத்துக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:23 PM
பகிர்:

படப்பிடிப்புக்குச் சரியான நேரத்துக்கு வரமாட்டார் என்கிற குற்றச்சாட்டு சிம்பு மீது உண்டு. இந்நிலையில் அவர் மணிரத்னத்தின் அடுத்தப் படத்துக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டுள்ளார்.

மணிரத்னத்துடன் சிம்பு எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. 

காற்று வெளியிடை படத்துக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு ஜனவரி முதல் தொடங்கவுள்ளது. 

இதனால் படப்பிடிப்பில் எடுக்கவேண்டிய காட்சிகளுக்கான பயிற்சிப் பட்டறையை நடத்தி வருகிறார் மணி ரத்னம். இதன்மூலமாக படப்பிடிப்பில் நேரம் வீணாவதைத் தடுக்க முடியும். கதாபாத்திரங்கள் குறித்த சரியான புரிதலை நடிகர்களிடம் ஏற்படுத்தமுடியும். படப்பிடிப்பில் ஏற்படும் சிக்கல்களை முன்கூட்டியே அறியவும் முடியும். இக்காரணங்களுக்காகப் பயிற்சி பட்டறையைச் சமீபத்தில் தொடங்கினார் மணி ரத்னம்.

இதில் சிம்புவும் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். எக்காரணம் கொண்டு மணி ரத்னம் படத்தில் நடிப்பதில் தடை எதுவும் வரக்கூடாது என்பதால் இப்படத்தைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுக்க ஆர்வமாக உள்ளார் சிம்பு. 

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் - அன்பானவன் அசராதவன் அடங்காதவன். யுவன் இசையமைத்த இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்தார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் - மைக்கேல் ராயப்பன். இந்நிலையில் சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம், சிம்பு அவர்களால் என்னைப் படுபாதாளத்துக்குக் கொண்டு செல்லும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.  கால்ஷீட் நேரத்தில் ஒருநாளும் வந்தது இல்லை. வரவும் மாட்டார். பலவழிகளில் தொல்லை கொடுத்தார். பலநாள்கள் அவரால் படப்பிடிப்பு நின்றது. சிம்புவினால் ஏற்பட்ட இடைஞ்சல், தொல்லைகள் ஆகியவற்றால் படம் குளறுபடியாக வந்தது. எனக்கு ஏற்பட்ட கதி வேறு எந்தத் தயாரிப்பாளருக்கும் மீண்டும் ஏற்படாமல் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டார்.

இதையடுத்து சக்க போடு போடு ராஜா பாடல் வெளியீட்டு விழாவில், மன்னிப்பு கோரினார் சிம்பு. பிரச்னைகளைப் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது சொல்லியிருக்கலாம். அல்லது படம் வெளியான பிறகு சொல்லியிருக்கலாம். ஒரு மாதம் கழித்துச் சொல்லியிருக்கலாம். 6 மாதத்துக்குப் பிறகு சொல்வதுதான் வருத்தமாக உள்ளது. அதையும் மீறி நான் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார் சிம்பு. இத்துடன் அந்த சர்ச்சைக்கு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மணி ரத்னம் படத்தில் தயாராகி வருகிறார் சிம்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.