முகப்பு
செய்திகள்

நடிகர் தனுஷ் மீது உரிமை கோரும் தம்பதி: தனுஷ் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சான்றிதழ்களில் உள்ள அடையாளங்களை சரிபார்க்க 28-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக...

Updated On : 24 பிப்ரவரி, 2017 at 12:34 PM
பகிர்:

நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் சான்றிதழ்களில் உள்ள அடையாளங்களை சரிபார்க்க 28-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷை தங்கள் மகன் என்று மேலூர் தம்பதி உரிமை கோரும் விவகாரத்தில் இரு தரப்பினரும் தாக்கல் செய்த நகல் ஆவணங்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்க மறுத்தது. மேலும் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. 

நடிகர் தனுஷ் தங்களது மூத்த மகன் என்று உரிமை கோரி மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தனுஷ் தங்களுக்கு பராமரிப்பு செலவாக மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர். 

Advertisement

இந்நிலையில், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகர் தனுஷ் மனு தாக்கல் செய்திருந்தார். மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதியர் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நான் அவர்களது மகன் கலைச்செல்வன் என்றும், வயதான அந்த தம்பதியருக்கு நான் மாதம் ரூ. 65 ஆயிரம் பராமரிப்புத் தொகையாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்துள்ளனர். ஆனால், நான் அவர்களது மகன் என்பதற்கான எவ்வித ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. இருப்பினும், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.

நான் 1983-இல் சென்னையில் உள்ள எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் பிறந்தேன். தற்போது, திரைத்துறையில் நடிகனாக உள்ளேன். கதிரேசன், மீனாட்சி தம்பதியர் தாக்கல் செய்துள்ள வழக்கால் எனது பெற்றோர் சங்கடங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் என்னை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார். எனவே, இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராக விலக்கு அளிப்பதோடு, வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பதில் மனுவில், தனுஷ் தங்கள் மகன் தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பினரும் தங்களிடம் உள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பினரும், தனுஷ் பயின்றதாக கூறப்படும் பள்ளிகளின் வருகைப் பதிவேடு, மாற்றுச் சான்றிதழ்களின் நகல்களைச் சமர்ப்பித்தனர். இதை ஏற்க மறுத்த நீதிபதி, அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இம்மனு மீதான விசாரணை இன்றும் தொடர்ந்தது. அப்போது, சான்றிதழ்களில் உள்ள அடையாளங்களை சரிபார்க்க 28-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனுஷ் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.