முகப்பு
செய்திகள்

வசூல் சக்கரவர்த்தி அமீர் கானின் தொடர் சாதனைகள்!

வசூலில் ஒவ்வொருமுறையும் புதிய உயரங்களை எட்டி வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்கிறார் அமீர் கான்.

Updated On : 10 ஜனவரி, 2017 at 3:57 PM
பகிர்:

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாடு முழுக்க டங்கல் படத்துக்கு ஏகோபித்த பாராட்டுகள் கிடைத்துள்ளன. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்பினரும் படத்தை ஆஹோஓஹோவென்று புகழ்ந்துவருகிறார்கள்.

உலகம் முழுக்க 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட்டு வெற்றிநடைபோட்டு வருகிறது. இந்தப் படம் முதல் வாரத்திலேயே உலகளவில் ரூ. 300 கோடியை வசூல் செய்தது. பிறகு 13 நாள்களில் இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடியை வசூல் செய்து சாதனை செய்தது.

இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம், 17 நாள்களில் தான் ரூ. 300 கோடி வசூலைத் தொட்டது. அதன் சாதனையை டங்கல் முறியடித்தது. முதல் 3 நாள்களில் இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலித்த டங்கல், 8 நாள்களில் ரூ. 200 கோடியையும் 13 நாள்களில் ரூ. 300 கோடியையும் வசூல் செய்தது. 

Advertisement

டங்கல் படம் தற்போது இந்தியாவில் மட்டும் ரூ. 350 கோடி வசூலித்துள்ளது. கூடவே இதுவரை உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மகத்தான சாதனை படைத்துள்ளது டங்கல் படம்.

இதன் அடிப்படையில், அமீர் கான் பாலிவுட்டின் தன்னிகரற்ற நட்சத்திரமாக விளங்குகிறார். 

பாலிவுட்டில் முதல் நூறு கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய படம், கஜினி. அதேபோல அவர் நடித்த 3 இடியட்ஸ் முதல் முதலாக ரூ. 200 கோடியைத் தொட்டது. அடுத்ததாக பிகே ரூ. 300 கோடியை எட்ட, தற்போது வெளிவந்துள்ள டங்கல் படம் ரூ. 350 கோடியைத் தாண்டிய முதல் ஹிந்திப் படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது. இதுபோல வசூலில் ஒவ்வொருமுறையும் புதிய உயரங்களை எட்டி வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்கிறார் அமீர் கான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.