செய்திகள்

நடிகர்களுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை!

எழில்

சூர்யா, சரத்குமார், சத்தியராஜ் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடியாணை பிறப்பித்து, உதகை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு தமிழ் நாளிதழில் 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி திரைப்பட நடிகைகள் குறித்த ஒரு கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பினர் தெரிவித்த ஆட்சேபத்தையடுத்து, அச்செய்திக்கு அப்பத்திரிகை வருத்தம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அந்தப் பத்திரிகை மீது கடும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதுதொடர்பாக, உதகையைச் சேர்ந்த ரொசாரியா என்பவர், தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பத்திரிகையாளர்களுக்கு எதிரான கருத்துகள் என்று கூறி அவதூறு வழக்குத் தொடுத்தார்.

அதற்காக நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், ஸ்ரீபிரியா, இயக்குநர் சேரன், விவேக், அருண் விஜய், விஜயகுமார் உள்ளிட்ட 8 பேர் மீது தனியார் முறையீட்டின்கீழ், 2009-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி உதகை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் வழக்குரைஞர்கள் விஜயன், செந்தில்குமார், பிச்சையம்மாள் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த வழக்கில் 2012-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்றும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அந்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், மே 15-ஆம் தேதி நடிகர்கள் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் யாரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, உதகை நீதித்துறை நடுவர் செந்தில்குமார் ராஜவேலு, இவர்கள் 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாதபடி பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், உதகை நீதிமன்றத்தில் ஜூன் 17-ஆம் தேதி நடிகர்கள் 8 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்கள், தங்கள் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

இந்நிலையில் 8 நடிகர்கள் மீதான வழக்கை உதகை நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT