முகப்பு
செய்திகள்

தமிழனாக இருந்தால் படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது: ஜெயம் ரவி வேண்டுகோள்

வனமகன் படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் நான் நடிக்கமாட்டேன்...

Updated On : 20 ஜூன், 2017 at 12:54 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 8:18 PM

பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இவர் ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். விஜய் தயாரித்து இயக்கும் வனமகன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், வனமகன் படம் ஜூன் 23 அன்று வெளிவருகிறது. இந்தப் படம் தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயம் ரவி கூறியதாவது:

கதை மேல் நம்பிக்கை வைத்து திறமையை வெளிப்படுத்திய கலைஞர்களால் இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் விஜய் போல சினிமாவை நேசிக்கும் ஒருவரால் தான் இந்தப் படத்தை எடுக்கமுடியும். 

Advertisement

என் படத்தில் நடித்தார் பெரிய நடிகையாகிவிடுவார்கள் என்று சொல்வார்கள். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த சாயிஷா அதேபோல பெரிய நடிகையாக ஆவார்.

கூட்டுக்குடும்பமாக வாழும் மலைவாழ் மக்களைப் பற்றிய படம் இது. நல்ல விஷயங்களை இப்படத்தில் சொல்லியுள்ளோம். உண்மையாக உழைத்து படத்தை எடுத்துள்ளோம். தமிழனாக இருந்தால் இந்தப் படத்தை யாரும் இணையத்தில் வெளியிடக்கூடாது.  

இந்தப் படத்துக்காக இயக்குநர் விஜய் என்னைப் பிழிந்து எடுத்துவிட்டார். காடுகளில் மொத்தப் படக்குழுவும் நீண்ட நேரம் நடிக்க வேண்டியிருந்தது. மரம் விட்டு மரம் தாவ வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது. எல்லா வலிகளையும் தாங்கிக்கொண்டு நடித்தேன். 

ஒருவேளை வனமகன் படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் நான் நடிக்கமாட்டேன். விஜய் மிகவும் உழைத்த இந்தப் படம் அவர் செலவழித்த பணத்தைத் திருப்பித் தரும். அப்படி படம் ஓடவில்லையென்றால் சம்பளம் வாங்காமல் அவருக்கு இன்னொரு படம் நடித்துத் தருகிறேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.