கடனைத் திருப்பிச் செலுத்தாமல் யாரும் ஓடிவிடமாட்டோம்: நடிகர் விஷால்
கந்துவட்டிக் கொடுமை குறித்து அறிக்கை வெளியிட்ட விஷால், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அன்புச்செழியன் குறித்து எழுதியதாவது...
சென்னை வளசரவாக்கத்தில், சினிமா ஃபைனான்சியர் கடனைக் கேட்டு மிரட்டியதால், திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
கந்துவட்டிக் கொடுமை குறித்து அறிக்கை வெளியிட்ட விஷால், தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் அன்புச்செழியன் குறித்து எழுதியதாவது:
அசோக் குமார் விஷயத்தில் அன்புச்செழியன் செய்துள்ளது மிகவும் தவறானது. அதில் நியாயமுமல்ல. அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நான் உள்பட அனைவரும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தத்தான் போகிறோம். யாரும் ஓடிவிடமாட்டோம். கடுமையாக உழைத்து எங்கள் கடனை நிச்சயம் அடைப்போம். இனிமேலும் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்று கூறியுள்ளார்.
வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பா. அசோக்குமார் (44). இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனர். சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தை அசோக்குமார் நிர்வகித்து வந்தார். அத்துடன் சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராகவும், அலுவலக நிர்வாகியாகவும் இருந்தார். வழக்கமாக காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் அசோக்குமார் செவ்வாய்க்கிழமை செல்லவில்லை. இந்நிலையில் அலுவலக ஊழியர்கள், அவரது செல்லிடப்பேசியைத் தொடர்பு கொண்டபோதும் அவரிடமிருந்து பதில் இல்லை. அதையடுத்து, அசோக்குமார் வீட்டுக்கு ஊழியர்கள் சென்று பார்த்தபோது, அவர் தனது உடற்பயிற்சி அறையில் சடலமாகத் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த வளசரவாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
வீட்டை போலீஸார் சோதனையிட்டபோது, அசோக்குமார் எழுதிய இருபக்கக் கடிதம் கிடைத்தது. அதில், 'தங்கள் நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் நஷ்டம் ஏற்பட்டது. அதன் காரணமாக பிரபல திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் பெற்றதாகவும், அவர் கடந்த 6 மாதமாக பணத்தைக் கேட்டு தொல்லை தந்து வந்ததுடன், பலவிதமாக மிரட்டல் விடுத்தும் வந்தார். வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்தேன்' என உருக்கமாகக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து இயக்குநர் சசிகுமார், இயக்குநர்கள் பாலா, அமீர், சமுத்திரக்கனி ஆகியோருடன் வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்று புகார் தெரிவித்தார். அவரது புகாரை அடுத்து திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.