செய்திகள்

எல்லோரையும் சிரிக்க வைத்த ஒரு படத்தின் தயாரிப்பாளர் ‘சர்வர்’ ஆன கதை: கந்துவட்டி களேபரங்கள்! 

DIN

சென்னை: நாம் எல்லோரையும் இன்று வரை பார்க்கும் பொழுதெல்லாம் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் 'வின்னர்' படத்தின் தயாரிப்பாளர் ராமசந்திரன், கந்து வட்டியின் காரணமாக ஓட்டல் சர்வர் ஆன உண்மைக் கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனரான இவர், சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராவும், அலுவலக நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.

தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார், தனது கடிதத்தில் ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் பெற்ற கடனுக்கு கந்துவட்டி கொடுத்து வந்ததும் அவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும் அதனால்தான் தற்கொலை முடிவு எடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். அக்கடிதத்தின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர்.

தற்பொழுது இதே கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளிவரத்  துவங்கியுள்ளன. நடிகர் அஜித், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், பார்த்திபன் மற்றும் பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதேபோன்ற கொடுமையினால் பாதிக்கப்பட்டு தற்பொழுது படத்தயாரிப்பிலிருந்து முற்றிலுமாக ஒதுங்கியிருக்கும் 'வின்னர்' படத்தின் தயாரிப்பாளர் ராமசந்திரன். இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர் பிசாந்த், கிரண் மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் 2003-இல் வெளிவந்த படம் வின்னர்.. வடிவேலுவின் 'கைப்புள்ள' நகைச்சுவை காட்சிகள் இன்று வரை புகழ்பெற்றவையாகும்.

இந்த படத்தின் தயாரிப்பின் பொழுது தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து தயாரிப்பாளர் ராமசந்திரன்  ஆங்கில செய்தித்தாளொன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நான் வாழ்வில் நல்ல நிலையிலிருக்கும் பொழுது படம் தயாரிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதன் பொருட்டு நான் தயாரித்த முதலும் கடைசியுமான படம் வின்னர்தான். படப்பிடிப்பு துவங்கியதிலிருந்து   கதாநாயகன் பிரசாந்த்தினால் தொடர்ந்து பிரச்னைகள். இறுதியில் கதாநாயகியையே மாற்ற வேண்டிய சூழல். இதன் விளைவாக  ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளை மறு ஒளிப்பதிவு செய்ய வேண்டிய நிலை.  

இதன் காரணமாக நான் திட்டமிட்ட பட்ஜெட்டை விட செலவு மூன்று மடங்காக அதிகமானது. இதனால் வேறுவழியில்லாமல் எனது எல்லா சொத்துக்களையும் அடமானம் வைத்து கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்க வேண்டி வந்தது.     

2001-இல் துவங்கிய படப்பிடிப்பானது நடந்துகொண்டே சென்று ஒரு வழியாக 2003-இல் ரிலீசானது. திரையரங்குகளில் இந்தப் படம் நன்றாக ஓடினாலும், திட்டமிட்ட பட்ஜெட்டி ல் எடுக்க  முடியாததால் எனக்கு பலத்த நஷ்டம் உண்டானது. கடன்களை திருப்பிச் செலுத்தும் பொழுது என்னிடம் இருந்து மொத்த பணமும் காலியாகி விட்டது. படம் நன்றாக ஓடினால் தருவதாகச் சொல்லியிருந்த உபரி பணத்தினைக் கூட இறுதியில் விநியோகஸ்தர்கள் யாரும் தராமல் ஏமாற்றி விட்டனர்.

இப்பொழுது கூட மாதத்திற்கு ஒருமுறை  ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் வின்னர் படம் ஓடுகிறது. ஆனால் அதன் தயாரிப்பாளரான எனக்கு அதன்மூலம் எந்த ராயல்டி உள்ளிட்ட பலனும் கிடையாது. இதற்கு காரணமெல்லாம் படத்தின் பணத்தேவைக்காக பல்வேறு உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது நாம் அதில் உள்ள  நிறைய விஷயங்களை கவனிப்பதில்லை.

இது ஏதோ எனக்கு ஒருவனுக்கு மட்டும் உண்டாகும் நிலையல்ல. நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்களின் நிலை இதுதான். படம் நன்றாக ஓடினாலும் பலரது  நிலை இவ்வாறாகத்தான் உள்ளது. பண நெருக்கடியினால் எனது வின்னர் படம் வெளியான பிறகு மூன்று ஆண்டுகளுக்கு நான் ஒரு ஓட்டலில் சர்வராக வேலை பார்த்தேன்.

அந்த தருணங்களை எல்லாம் நான் நினைவு கூற விரும்பவில்லை. எனது மகன்கள் தற்பொழுது நல்ல நிலையில் உள்ளார்கள். சினிமா என்ற விஷயத்தின் மீது எனக்கு அதீத ஆர்வம் உள்ளது. அதன் காரணமாகத்தான்  எதோ ஒரு விதத்தில் சினிமாவோடு தொடர்பில் இருக்கிறேன். சில படங்களில் குணசித்திர வேடங்களில் நடிக்கிறேன். அத்துடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறேன்.

இவ்வாறு ராமச்சந்திரன் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT