ஜெயலலிதா குறித்து விமரிசனம்: பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யக்கோரி மனு!
மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக சர்வாதிகாரி போல...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யக் கோரி சென்னைக் காவல்துறை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
லூயிசாள் ரமேஷ் என்கிற வழக்கறிஞர் அளித்துள்ள அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல், மறைந்த முதல்வர் அம்மாவைக் (ஜெயலலிதா) கொச்சைப்படுத்தும் விதமாகத் தொடர்ந்து பேசிவருகிறார். இவருடைய ஏற்பாட்டின் பேரில் சர்வாதிகாரி என்கிற ஒரு டாஸ்க் போட்டியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா தத்தா, பொதுமக்களைக் கொடுமைப்படுத்தும் பல்வேறு செயல்களைச் செய்கிறார். ஜூலை 31 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை ரித்விகா, வடநாட்டில் இருந்து வந்த ஐஸ்வர்யாவுக்குத் தெரியாது, தமிழ்நாட்டில் இதற்கு முன்பு சர்வாதிகாரி ஆட்சி செய்தவர்களின் நிலைமை என்ன ஆனது என்று பேசுகிறார். சனிக்கிழமை இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கும்போது, தமிழகத்தில் சர்வாதிகாரி போன்று ஆட்சி நடத்தியவர்கள் என்ன ஆனார்கள் என்று பேசுவார்.
Advertisement
மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறாக சர்வாதிகாரி போல சித்தரித்து நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும். கமல் மற்றும் நிகழ்ச்சியைத் தயாரிக்கும் நிறுவனம் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன் என மனுவில் கூறப்பட்டுள்ளது.