'தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல! மின்முத்தம் மெய் முத்தம் போலல்ல!' என்ற வரிகள் இடையில் வரும் இந்தப் பாடலைத் தான் காதலர்கள் நேற்று முதல் மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
கெளதம் மேனன் தனது ஒன்றாக ஒரிஜினல்ஸ் மூலம் இயக்கி வெளியிட்டுள்ள இரண்டாவது காணொலி உலவிரவு (டேட்டிங் நைட்). இதில் மலையாள ஹீரோ டொவினோ தாமஸ் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி இருவரும் நடித்துள்ளனர். காதலா் தினத்தை முன்னிட்டு இந்தப் பாடலின் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த விடியோவில் காதலர்கள் சிறிய ஊடலுக்குப் பிறகு அன்றைய இரவில் சந்தித்து வீதியில் உலா வருகின்றனர். பேருந்தில் காதல் சொட்டச் சொட்ட பயணம் செய்கிறார்கள். இரவு உணவை ஒரு நட்சத்திர உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, நள்ளிரவு நட்சத்திரம் ஜொலிக்க அருகருகே படுத்து கட்டித் தழுவுகிறார்கள். இந்தப் பாடல் காட்சிகள் மென் காதல் காட்சிகள் ரசனையுடன் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்களின் உடனடி வாழ்த்துக்களைப் பெற்று வைரலாகிவருகிறது.
இதற்கு முன் கெளதம் மேனன் மா என்ற குறும்படத்தை சர்ஜுன் இயக்கத்தில் வெளியிட்டிருந்தார். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட அந்தக் குறும்படம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இந்நிலையில் குறும்படம் மட்டுமின்றி தனி இசைப்பாடல்கள் அடங்கிய விடியோக்களையும் தன்னுடைய யுடியூப் சேனல் மூலம் தற்போது வெளியிட ஆரம்பித்துள்ளார். இந்த வரிசையில் முதலாதவதாக கூவ கூவ பாடல் வெளிவந்து ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து காதலர் தின ஸ்பெஷலாக உலவிரவு என்ற பாடலை நேற்று வெளியிட்டார். கூவ பாடலைத் தொடர்ந்து இந்த பாடலையும் மதன் கார்க்கி எழுதியுள்ளார். கார்த்திக் பாடலை இசையமைத்ததோடு பாடியும் உள்ளார். தொகுப்பாளர் திவ்யதர்ஷினி இதற்கு முன்பு வெள்ளித் திரையில் சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் படம் துருவ நட்சத்திரத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் உலவிரவு காணொலியில் டிடி நடித்துள்ளது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் டிடியை புகழ்ந்துள்ளனர். தனது ட்விட்டரில் கவுதம் மேனன், டிடி, மதன் கார்க்கி மற்றும் பாடகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.