அண்மையில் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தன்னுடைய மகள் கீர்த்தனாவின் திருமண பத்திரிகையை ரஜினியிடம் கொடுத்து நேரில் அழைக்கச் சென்றிருந்தார். அது குறித்து ஒரு நேர்காணலில் அவர் கூறுயது, 'என்னுடைய மகளுடைய திருமணத்துக்காக முக்கியமான விஐபிக்களை நானே நேரடியாக சந்தித்து பத்திரிகை குடுக்கப் போறேன்னு சொன்னதுமே ரஜினி சார்கிட்ட போகும்போது என்னை கூட்டிட்டுப் போங்கன்னு அப்படின்னு ரஜினி சார் ஃபேனான என் மகன் ராக்கி கேட்டான். ரஜினி சார் கூட ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசைப்பட்டான். அவனையும் அழைச்சுக்கிட்டு போனேன்.
ரஜினி சாரை சந்திக்க நேரம் கேட்டு இரண்டு நாள் கழித்து எனக்கு நேரம் ஒதுக்கினார்கள். அவர் கொடுத்த டைமில் ராக்கியோட போனேன். வழக்கமா நான் டைமுக்கு முன்னாடியே போயிடுவேன். அவர் வேஷ்டி அடி நுனி காத்துல படபட என்று அசைவது ரீரெக்கார்ட்டிங்கில் ஒரு ஹெலிகாப்டர் ஒலி எழுப்புவது போல இருந்தது. அவர் வேகமாக நடந்து வந்தார். வழக்கம்போல் கை கொடுத்தார். நான் ராக்கியை அறிமுகப்படுத்தியவுடன் அவருக்கு பிரமிப்பா
இருந்தது. நான் சின்ன வயசுல பார்த்ததுன்னு சொல்லி ராக்கியை கட்டிப் பிடித்துக் கொண்டார். ராக்கிக்கு ரொம்ப கூச்சமாக போயிடுச்சு.
அழைப்பிதழை பார்த்தார். அதில் என் மகள் கீர்த்தனா எனக்கு எவ்வளவு ஸ்பெஷல். பாசம் என்ற ஒற்றையடிப் பாதையில் இருந்து விலகி தாம்பத்யம் என்ற தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழையப் போகிறாங்க என்று எழுதியிருந்தேன். படிச்சார். நான் அவரிடம் தமிழ் இவ்வளவு வேகமாக படிகக்த் தெரியுமா என்று கேட்டேன். அவர் இன்னும் வேகமாகப் படித்தார். அந்த வரிகளை மட்டும் அடிக்கோடிட்டு அழுத்தம் திருத்தமா சொன்னார். என் கண்களில் தண்ணீர் தளும்பியதை அவர் கவனித்தார். உடனே பெற்ற மகளைப் பிரிவது ரொம்ப கஷ்டமா இருக்குல. பட் இட்ஸ் ஒன் பார்ட் ஆஃப் த கேம் என்று சொன்னார்.
நான் அழைப்பிதழை குடுக்க நிறைய பேர் வீட்டுக்குப் போனேன். சில பேர் படிக்கற மாதிரி நடிப்பாங்க. சில பேர் கொஞ்சமா படிப்பாங்க. மூடி வெச்சுட்டு நான் அப்புறமா படிக்கறேன் என்பார்கள். அவர் ஒரு கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டு படித்தார். அவர்கிட்ட இருந்த பாசாங்கு இல்லாத தன்மை அது. அவர்
இண்டஸ்ட்ரிக்கு வந்து எவ்வளவு வருஷமாயிடுச்சு. தலை நரைப்பது ஞானமான ஒரு வளர்ச்சிதான். அதைப் பத்தி கவலைப்பட்டுக்க மாட்டார் போலவே 40 வயசுக்கு பிறகு பார்வை கொஞ்சம் மங்கும். அப்போது கண்ணாடி போடுவது ஒரு இயல்பான விஷயம்தான். நிறைய பேர் அதை மறைப்பாங்க. நிறைய பேர் பையன் இருக்கறதையோ பொண்ணு இருக்கறதையோ மறைப்பாங்க. ஆனா அவங்களுக்கு பேரன் பேத்தி எல்லாம் இருக்கும். ரஜினி சார் கிட்ட இருக்கும் உண்மைத்தன்மை எனக்கு ரொம்ப பிடிக்கும். இயல்பா பேசறதும் இயல்பா பழகறதும் முகப்பூச்சு ஒப்பனை இல்லாத அவருடைய முகம், பேச்சும் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என்கூட அரசியல் சார்ந்தும், அரசியலில் அவருடைய ஈடுபாடு எப்படி வந்தது என்றெல்லாம் பேசினார். சினிமாவில் நான் இவ்வளவு பெரிய இடத்தைப் பிடிப்பேன் என்பது எனக்கு தெரியாது. நிச்சயமா எனக்கு மேல இருக்கற கடவுள் காட்டிய கருணை. 96-ல் எனக்குத் தோணவில்லை. இப்ப அரசியலுக்கு வரணும், இல்ல மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு தோணுது. இது வரைக்கும் என் உடனிருந்த என்னை ரொம்ப உயர்த்தின அதே கடவுள் இதுக்கும் ஒரு வழி வகுப்பார் என்ற நம்பிக்கை இருக்கு. அது ஒன்னுதான் உத்வேகப்படுத்துற ஒரே விஷயம். ரொம்ப நாளா சுயநலமா இல்லாம மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு எனக்குத் தோணுது. அதைத் தவிர வேற எதுவும் எனக்குத் தெரியாது. இதுக்காக் இப்படித்தான் பேசணும் அப்படித்தான் பேசணும் என்று முடிவு பண்றதும் கிடையாது. எப்படி நான் இயல்பா இருக்கறனோ அது மக்களுக்குப் பிடிக்கும்னு நம்பறேன் என்று அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் எனக்கு பிடிச்சுப் போச்சு. எல்லோருக்கும் பிடிக்கும்.
அவர் சொன்ன லாஜிக்கும் சரி. மிகையே இல்லாத ஒரு பேச்சு இதுக்காக தன்னை தயார்ப்படுத்திக்கலை. 234 தொகுதிகளில் உறுப்பினர்கள் சேர்க்கும் வேலைகள் எல்லாம் சரியாதான் நடந்துக்கிட்டு இருக்கு. அதில் அவருடைய முனைப்பும் தீவிரமும் தெரிந்தது. காப்பி சாப்பிட வெச்சு ராக்கி என்ன பண்ணப் போறார் என்று கேட்டார் ரஜினி. ஏ.எ.விஜய்கிட்ட அஸிஸ்டெண்டா ஒர்க் பண்றார் இப்ப டைரக்ட் பண்ணப் போறார் அதே மாதிரி கீர்த்தனாவும் மணி சார்கிட்ட ஒர்க் பண்ணாங்க. இப்ப அவங்களும் டைரக்ட் பண்ணப் போறாங்க என்றேன்.
வெரி குட் ஆல் தி பெஸ்ட் என்றார், இப்படி ஒரு சந்தோஷமான ஒரு நிகழ்வு சமீபத்தில் நடந்தது’ என்று கூறினார் பார்த்திபன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.