முகப்பு
செய்திகள்

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்குத் தடையில்லை: உயர் நீதிமன்றம்

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளியிடத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது...

Updated On : 30 ஜனவரி, 2024 at 11:55 AM
பகிர்:

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை வெளியிடத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், செந்தில் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் - தானா சேர்ந்த கூட்டம். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனவரி 12 அன்று வெளியாகும் இப்படம் குறித்து ஒரு பேட்டியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியதாவது:

நானும் ரெளடிதான் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், தேதிகள் பிரச்னைகளால் அவர் கவண் படத்தை ஒப்புக்கொண்டுவிட்டார். ஞானவேல்ராஜா ஒரு படம் பண்ண அழைத்தார். குறுகிய காலத்தில் முடிவு செய்யவேண்டியதாக இருந்தது. நேரம் குறைவாக இருந்ததால் என்னுடைய சொந்தக் கதை இல்லாமல் ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்கை இயக்க ஒப்புக்கொண்டேன். அதிகாரபூர்வமாக உரிமம் வாங்கி ரீமேக் செய்துள்ளோம். ஆனால் என் பாணியில் ரீமேக்கை இயக்கியுள்ளேன். ஸ்பெஷல் 26 படத்தைத் தாண்டிய ஒரு நிஜ சம்பவத்தைப் படத்தில் இணைத்துள்ளேன். ஸ்பெஷல் 26 போன்ற ஒரு படத்தில் சொடக்கு மேல பாடலுக்கு இடம்கிடையாது. பொழுதுபோக்கான ஒரு படம் தரவேண்டும். அதை மனத்தில் வைத்துக்கொண்டுதான் படம் இயக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் "ஸ்பெஷல் 26" ஹிந்தி படத்தை தென்னிந்திய மொழிகளில் இயக்க உரிமை பெற்றுள்ளதால் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று நடிகர் பிரசாந்தின் தாய் சாந்தி தியாகராஜன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இதற்குப் பதில் அளித்த படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, ரீமேக் உரிமையை ஆர்பிபி நிறுவனத்திடம் பெற்றதாக நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.

ஞானவேல்ராஜாவின் இந்த விளக்கத்தை ஏற்று உயர் நீதிமன்றம் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. பிரசாந்தின் தாய் சாந்தி தியாகராஜன் தொடுத்த இடைக்கால வழக்கை முடித்து வைப்பதாகவும் அறிவித்துள்ளது.

இதனால் ஜனவரி 12 அன்று தானா சேர்ந்த கூட்டம் படம் எவ்விதச் சிக்கலுமின்றி வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.