காலா படத்துக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
நடிகர் ரஜினிகாந்த் நடித்து நாளை திரைக்கு வரவுள்ள காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி...
நடிகர் ரஜினிகாந்த் நடித்து நாளை திரைக்கு வரவுள்ள காலா' திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் போரூரைச் சேர்ந்த ரமேஷ் குமார் மனுத்தாக்கல் செய்தார்.
காலா திரைப்படம் வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடார் என்பவரின் வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து, நாடார் சமுதாயத்துக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என வழக்குத் தொடரப்பட்டது.
இந்நிலையில் திரவியம் நாடாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் வழக்கு தொடரவில்லை, ஒரு படத்தைப் பார்க்காமல் எப்படி அதில் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது எனக் கூறமுடியும் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், காலா படத்துக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டார்கள்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள காலா படம் நாளை வெளியாகவுள்ளது.
கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள காலா படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.