செக்க சிவந்த வானம் திரைப்பட ஆடியோ ரிலீஸ் விழாவன்று அதில் நடித்திருந்த பிரபல நட்சத்திரங்கள் அனைவரும் மேடையேறி படத்தைப்பற்றி ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டனர்.
மேடையேறிய நடிகர்களில் சிம்புவுக்கு ரசிகர்களிடையே எழுந்த கைதட்டல் அடங்கச் சிறிது நேரம் ஆனது. வேறெந்த நடிகருக்கும் இப்படியொரு கைதட்டல் என்பது அன்று இருந்திருக்கவில்லை. விழாவன்று விஜய் சேதுபதி பங்கேற்காவிட்டாலும் கூட அவரது பெயரை அறிவிக்கையில் அப்போதும் ரசிகர்களின் கரகோஷம் ஆர்ப்பாட்டமாக இருந்தது. படத்தைப் பொருத்தவரை அனைத்து நடிகர், நடிகைகளும் சிறப்புர நடித்திருந்த போதும் சிம்பு மற்றும் விஜய் சேதுபதியின் நடிப்பு அவர்களது ரசிகர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை விதைத்துள்ளது என்பது உறுதி. இந்நிலையில் செக்கச் சிவந்த வானம் குறித்து இணைய ஊடகமொன்றுக்கு நேர்காணல் அளித்த விஜய் சேதுபதியிடம் நிகழ்ச்சியின் நெறியாளர் சிம்பு குறித்த கேள்வியொன்றை எழுப்பினார்.
செக்க சிவந்த வானத்தைப் பொருத்தவரை இத்திரைப்படம் நடிகர் சிம்புவுக்கு மிகச்சிறந்த கம்பேக் திரைப்படம்! என்று கூறலாமா? என்று கேட்டார். அதற்கு பதிலளிக்கையில் விஜய் சேதுபதி நடிகர்
சிம்புவுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக, இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சிம்புவுக்கு எதற்கு கம் பேக், அவர் தமிழ்த் திரைப்பட உலகை விட்டு இடையில் எங்காவது போய்விட்டாரா என்ன? அவர் இங்கேயே தான் இருக்கிறார். தொடர்ந்து வெளிவரக்கூடிய அத்தனை திரைப்படங்களையும் பார்த்து தனக்குத் தேவையானவற்றை ஆழமாகக் கற்றுக் கொண்டே இருக்கும் நடிகர் அவர். தனக்கான காட்சிகளை அப்படியே உள்வாங்கி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகர்களில் ஒருவர் சிம்பு. அவருக்கெல்லாம் கம் பேக் தேவையில்லை. அவரது ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சிம்பு இடைப்பட்ட காலங்களில் திரைப்படங்களில் அதிகம் நடிக்கவில்லை என்றாலும் அவரது ரசிகர்கள் அவரை மறக்கவே இல்லை. சிம்புவை இன்றும் அவரது ரசிகர்கள் ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுகிறார்கள். எனவே எந்தத் திரைப்படத்தையும் சிம்புவுக்கு இது தான் கம் பேக் திரைப்படம் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. அந்தக்கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. என்று சிம்புவுக்கு வக்காலத்து வாங்கினார் விஜய் சேதுபதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.