சர்கார் படத்துக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
சர்கார் படத்துக்குத் தடை கோரி வருண் தாக்கல் செய்த வழக்கில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கமும்...
சர்கார் படத்துக்குத் தடை கோரி வருண் தாக்கல் செய்த வழக்கில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கமும் வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் - சர்கார். இந்தப் படத்துக்கு எதிராகவும், படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு தொடரப்படும் எனத் தகவல் பரவியது. இதையடுத்து, தங்கள் கருத்தை கேட்காமல், படத்துக்குத் தடை விதிக்கக்கூடாது என படத்தைத் தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்றும் சர்கார் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், செங்கோல் என்ற தலைப்பில் கதை எழுதினேன். இந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். இந்த நிலையில், என்னுடைய கதையைத் திருடி, சர்கார் என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்தேன். அந்தச் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், இருதரப்பையும் அழைத்து விசாரித்தார். இறுதியில், இருவரது கதையும், ஒரே கதைதான் என உத்தரவிட்டுள்ளார். எனவே, சர்கார் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். அந்தப் படத்தின் கதை என்னுடையது என அறிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Advertisement
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி எம்.சுந்தர் முன்பு மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் எம்.புருஷோத்தமன் முறையிட்டார். அதற்கு நீதிபதி, ஏற்கெனவே எதிர்தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த மனு நகலை அவர்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி, வழக்கை இன்று விசாரிப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. சர்கார் படத்துக்குத் தடை கோரி வருண் தாக்கல் செய்த வழக்கில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும், தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கமும் வரும் 30ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.