முகப்பு
செய்திகள்

சட்டப்படி நடவடிக்கை எடுக்கட்டும், இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாடுவேன்: எஸ்.பி.பி.

கடந்த ஓர் ஆண்டுகளாக அவர் இசையமைத்த பாடல்களை மேடையில் பாடாமல் தான் இருந்தேன். பிறகுதான் யோசித்தேன்... 

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

கடந்த வருட மார்ச் மாதம் இளையராஜா - எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இடையே காப்புரிமைப் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. திரையிசைப் பயணத்தில் 50 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதையொட்டி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உலகம் முழுவதும் பயணித்து இசைக் கச்சேரிகளை நடத்தினார். இந்நிலையில் இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர் எஸ்பிபிக்கும், பாடகர் சரண், பாடகி சித்ரா, கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார். இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறிச் செய்தால் காப்புரிமைச் சட்டத்துக்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத் தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, இனிமேல் இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டேன். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம் என அறிக்கை வெளியிட்டார் எஸ்.பி.பி.

இந்நிலையில் தன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை, இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி மேடையில் பாடவுள்ளதாக எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:

எனக்கு நோட்டீஸ் அனுப்பிய பிரச்னை இன்னும் ஓயவில்லை. எனக்கு ஏன் அவர் அப்படிச் செய்தார் எனத் தெரியாது. அவர் இசையமைத்த பாடல்களை நான் பாடக்கூடாது என்று சொன்னாலும் நான் பாடுவேன். என் மகன் நடத்திய ஒரு நிறுவனத்துக்குத்தான் நோட்டீஸ் அனுப்பினார். பாடுவதற்கு எனக்குத் தடை விதிக்கவில்லை.

Advertisement

கடந்த ஓர் ஆண்டுகளாக அவர் இசையமைத்த பாடல்களை மேடையில் பாடாமல் தான் இருந்தேன். பிறகுதான் யோசித்தேன். இளையராஜா இசையமைப்பில்தான் நான் அதிகப் பாடல்களைப் பாடியுள்ளேன். எனக்கும் அதில் பங்கு உள்ளது எனத் தோன்றியது. இப்போது மீண்டும் அப்பாடல்களைப் பாட ஆரம்பித்துவிட்டேன். அவர் என்மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நானும் சட்டப்படி பதில் சொல்ல முடிவெடுத்துள்ளேன். ஒரு நண்பனுக்கு அவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவது சரியல்ல. எந்தப் பாடலுக்கு அவருக்கு உரிமை உள்ளது என்பதை அவர் கூறவேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு தெளிவு கிடைக்கும். இதெல்லாம் நடந்தாலும் அவர்மீது எனக்கு துளி மரியாதை குறையவில்லை. ஓர் இசையமைப்பாளராக எப்போதும் அவர் காலைத் தொட்டுக் கும்பிடுவதற்குத் தயங்கமாட்டேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments