முகப்பு
செய்திகள்

ஹிந்தி பிக் பாஸ் 12 ஆரம்பமானது: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்பு!

ஹிந்தி பிக் பாஸ் - சீசன் 12, கலர்ஸ் தொலைக்காட்சியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடந்த எட்டு வருடங்களாக...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

ஹிந்தி பிக் பாஸ் - சீசன் 12, கலர்ஸ் தொலைக்காட்சியில் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது. கடந்த எட்டு வருடங்களாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கியதுபோல இந்த வருடமும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். கடந்த வருட ஹிந்தி பிக் பாஸ் போட்டியை நடிகை ஷில்பா ஷிண்டே வென்றார். அவருக்கு ரூ. 45 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மற்றொரு பாலிவுட் நடிகையான ஹினா கான், இரண்டாம் இடம் பெற்றார். இந்நிலையில் இந்த வருடம் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஹிந்தி பிக் பாஸ் போட்டியில் நுழைந்துள்ளார். 

2013-ல் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின்போது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜீத் சாண்டிலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதித்தது பிசிசிஐ. இந்த நிலையில் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 36 பேரை ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து தில்லி நீதிமன்றம் கடந்த 2015 ஜூலையில் விடுவித்தது. இதையடுத்து தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ஸ்ரீசாந்த்.  ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சமீபத்தில் நீக்கியது கேரள உயர் நீதிமன்றம். இதுதவிர ஸ்ரீசாந்துக்கு எதிராக பிசிசிஐ மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டது.  அதை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற அமர்வு, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கிய ஒரு நபர் அடங்கிய அமர்வின் உத்தரவை தள்ளுபடி செய்தது. மேலும் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையையும் உறுதி செய்தது.

கிரிக்கெட்டிலிருந்து விலக்கப்பட்டாலும் திரைப்படம், சின்னத்திரை ஆகிய துறைகளில் நுழைந்துள்ளார் 35 வயது ஸ்ரீசாந்த். சில மலையாள, ஹிந்திப் படங்களில் அவர் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 

Advertisement

இந்த வருட ஹிந்தி பிக் பாஸ் போட்டியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களில் ஸ்ரீசாந்தும் ஒருவர். 2011-ம் ஆண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நினைத்தேன். அது நடக்கவில்லை. அதனால் இந்தமுறை நுழைந்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார். பிக் பாஸ் போட்டியில் தன்னுடைய நிலை மற்றும் தடை குறித்து ஸ்ரீசாந்த் பல கருத்துகளை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments