புற்று நோயால் அவதிப்படும் தன்னை அவமதித்த காவலர்கள்: ஆயிரம் பேருக்கு மேல் பகிர்ந்த இயக்குநர் ரமணாவின் ஃபேஸ்புக் பதிவு!
புற்று நோய் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவார் என்றால்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னைக் காவலர்கள் அவமதித்த விதம் குறித்து இயக்குநர் ரமணா எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவு கவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் ரமணா ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:
காவல்துறையில் களைகள்!
கண்ணியம் மிக்க சட்டம் மற்றும் காவல்துறை மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அதில் பல நேர்மையான அற்புத மனிதர்களையும் தனிப்பட்டமுறையில் எனக்கு மிக நெருங்கிய பரிட்சையமும், நட்பும் உண்டு. ஆனால்...
நான் சந்தித்த நேர்ந்த காவல் உதவி ஆய்வாளர், காவலர் இருவரும் அந்த கண்ணியமான நேர்மையான அதிகாரிகள் வட்டத்துக்குள் வராதது மட்டுமல்லாமல் ஒரு சராசரி மனிதப்பிறவியாகக்கூட கருதத் தகுதியற்றவர்கள்.
இன்று காலை நான்,என் மனைவி, மகள் காரில் சென்றபோது சாந்தோமில் என் வீட்டருகில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்துக்கொண்டிருந்தது காவல்துறை.
சாலை விதிகளை மீறும் வழக்கம் எனக்கு எப்போதும் இல்லாத காரணத்தால் நான் சாலை விதிகளுக்குட்பட்டே என் வாகனத்தைத் திருப்பினேன். மிதமான வேகத்தில் வந்த என்னை வழியில் அங்கிருந்த காவலர் வழிமறித்து காரை நிறுத்தச்சொல்லி நான் விதியை மீறி திரும்பியதாகச் சொல்லி அபராதம் கட்டச் சொன்னார். ஆனால், விதியை மீறாததால் நான் அபராதம் கட்ட மறுத்தேன். அதற்கு அவர் என்னை காரில் இருந்து இறங்க வற்புறுத்தி எனது லைசென்ஸைக் காண்பிக்கச் சொல்லி, வாங்கி அங்கு அபராதம் விதித்துக்கொண்டிருந்த உதவி ஆய்வாளரிடம் தந்து எனக்கு அபராதம் விதிக்கச் சொன்னார்.
அதற்கு நான் அந்த உதவி ஆய்வாளரிடம் அபராதம் கட்டுவதற்காக காவலரிடம் என் லைசென்ஸைத் தரவில்லை, எனக்கு வாகனம் ஓட்ட தகுதி இருப்பதற்கு அத்தாட்சியாக மட்டுமே தந்ததாகவும் கூறி அபராதம் கட்ட மறுத்தேன்.
அப்போது அந்த மனிதப் பண்பாளர் உதவி ஆய்வாளர், என்னைப் பார்த்து, ஏய்.. தள்ளி நின்னு பேசுடா... மேல எச்சில் படப்போகுது... உன் நோய் எனக்கு ஒட்டிக்கும்... என்று கூற புற்றுநோயால் பாதிக்கபட்டதை அறிந்தும் அவர் அப்படிப் பேசியதில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
புற்றுநோயால் பாதித்தவனை அரசாங்கத்தின் காவல்துறையில் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இப்படி மனிதாபமற்ற முறையில் பேசியது வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட.
அதைவிடக் கொடுமை, அழைத்து வந்த காவலர், பாதியிலயே சாவப் போறவனையெல்லாம் என்கிட்ட கூட்டிகிட்டு வந்து என் உயிர ஏன் எடுக்குற என்று கூற, நான் அவரிடம் நீங்கள் அப்படிப் பேசுவது தவறு என்று உதவி ஆய்வாளரிடம் சுட்டிக்காட்ட, அதற்கு, அப்படித்தாண்டா பேசுவேன் என்று தன் பதவியையும் பொறுப்பையும் உணராமல் கீழ்த்தரமாக பேச, கோபத்தால் நானும் அவரை என்னை அவர் கூறிய அதே வார்த்தைகளால் அவரைத் திருப்பித் திட்ட... வாக்குவாதம் நீடிக்க... பக்கத்தில் உதவி ஆள்வாளர் பதவி வகிக்கும் ஒருவர் உன்மையை உணர்ந்து என்னைச் சமாதானப்படுத்தி அங்கிருந்து அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தார்.
அங்கு நிலவிய சூழலால் நானும் காரை எடுத்துக்கொண்டு நகர, சற்று தூரம் வந்தவுடன் என் ஒரிஜினல் லைசென்ஸ் அந்தக் கண்ணியமற்ற காவல் அதிகாரியிடம் இருப்பதை உணர்ந்து மீண்டும் அவ்விடத்திற்கு நான் காரைத் திருப்ப முயல, என் மகள் தர்ஷினி வேண்டாம்பா... நீங்க மறுபடியும் போகவேண்டாம். நான் சென்று வாங்கி வருகிறேன் என்று கூற, மேலும் சூழலைச் சிக்கலாக்க விரும்பாமல் மகளை லைசென்ஸ் வாங்க அனுப்பினேன்.
ஆனால் அந்த உதவி ஆய்வாளர் பெண் என்ற காரணத்தாலும் அவளின் அமைதியான குணத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவளை வேண்டுமேன்றே நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, உன் அப்பன் என்னை எதிர்த்து பேசியதால் அபராதம் கட்டினால்தான் லைசென்ஸைத் தருவேன் என்று நிர்பந்தித்ததால், என் மகள் நான் மீண்டும் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு என் குரல் மற்றும் உடல் நிலையை மோசமாக்கிக் கொள்ள விரும்பாமல் எனக்குத் தெரிவிக்காமல் அபராதத்தைச் செலுத்தி என் ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுக்கொண்டு வந்து தந்தாள். அவள் அபராதம் செலுத்தியது எனக்குத் தெரியாத காரணத்தான் நான் காரை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்த பின்பே அவள் அபராதம் கட்டி லைசென்ஸை வாங்கி வந்ததை வருத்தத்துடன் கூறினாள்.
அரசாங்கத்தின் விதிமுறைகள், ஆணைகள் மக்களை நெறிப்படுவதற்காக இருக்கவேண்டும். மாற்றாக இதுபோன்ற மனிதாபமற்ற மோசமான செயலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குச் சாதகமாக இருப்பது வேதனை.
குறிப்பாக புற்று நோய் பாதித்த ஒருவனையே இப்படி அந்த ஆய்வாளர் நடத்துவார் என்றால்... சராசரி வெகுஜனத்திடம் அவரது அணுகுமுறை என்னவாக இருக்கும் என்று நினைக்கவே பயங்கரமாக உள்ளது.
உயிருடனும், வாழ்வுடனும் போராடிக்கொண்டிக்கும் எங்களைப் போன்ற புற்று நோய் போராளிகள், யாரிடமும் அனுதாபத்தை எதிர்பார்ப்பதில்லை. ஆனால், இவர்களைப் போன்றவர்கள் கருணையுடன் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை.. ஆனால் பாதியில் சாகப்போகிறவன் என்று கண்ணியமில்லாத வார்தைகளைச் சராசரி மனிதர்களிடம் அதிகாரத் திமிரில் பயன்படுத்தி காயப்படுத்துவதைத் தவிர்க்கலாம். செய்வார்களா...?
பின் குறிப்பு - எனது இந்தப் பதிவில் என் கருத்தில் நியாயம் இருப்பதாய் நண்பர்கள் நீங்கள் கருதினால் இப்பதிவை உங்கள் பக்கத்தில் பகிரவும்.
உங்களின் பகிர்தலால் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வேதனை யார் மூலமாவது அம்மனிதர்களைச் சென்றடைந்து குறைந்தபட்சம் அவர்கள் சக மனிதர்களிடம் நடந்துகொள்ளும் விதம் மனிதத்தன்மையுடன் மாறாதா என்ற நப்பாசைதான். நம்பிக்கைதானே வாழ்க்கை என்று வேதனையுடன் தனது அனுபவத்தைப் பதிவாக எழுதியுள்ளார்கள்.
ரமணாவின் கோரிக்கையை ஏற்று ஆயிரத்துக்கும் அதிகமானோர் அவருடைய ஃபேஸ்புக் பதிவைப் பகிர்ந்துள்ளார்கள்.
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இயக்குநர் ரமணா - திருமலை, சுள்ளான், ஆதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.