நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற இரு மாணவிகள் நேற்று தற்கொலை செய்து கொண்டார்கள்.
திருப்பூர், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (51), பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ரிதுஸ்ரீ (18). இவர் கடந்த ஆண்டு திருப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்புத் தேர்வில் 490 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தார். இந்நிலையில் மருத்துவக் கல்வி பயில கடந்த மாதம் நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளார். நீட் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியாகியதில், மாணவி ரிதுஸ்ரீ, மருத்துவம் பயில்வதற்குத் தேவையான மதிப்பெண் குறைவாக இருந்ததாக வீட்டில் தெரிவித்துள்ளார். பெற்றோரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரிதுஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல பட்டுக்கோட்டை மாணவி தீக்குளித்து நேற்று பிற்பகல் தற்கொலை செய்து கொண்டார். பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் சாலையிலுள்ள சீனிவாசன் நகரில் வசிப்பவர் நம்புராஜ். இவர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் கட்டணம் செலுத்தி இருசக்கர வாகனங்கள் பாதுகாக்கும் நிலையம் நடத்தி வருகிறார். இவர் மகள் வைஷியா (17). இங்குள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்து விட்டு மருத்துவம் படிக்க விரும்பி கடந்த மாதம் நடைபெற்ற நீட் தேர்வை எழுதியுள்ளார். நேற்று, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் வைஷியா தேர்ச்சி பெற்றார். இவர் 720-க்கு 230 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், மருத்துவப் பட்டப்படிப்பில் சேர இந்த மதிப்பெண் போதுமானதல்ல என்பதால், மன வேதனைக்கு ஆளானார். இதனால் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்தக் காயமடைந்த இவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இரு மாணவிகளின் தற்கொலை குறித்து இயக்குநர் பா. இரஞ்சித் ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
நீட் தேர்வுப் படுகொலைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. இப்போது ரிதுஶ்ரீ, வைசியா. எளியவர்களுக்குக் கல்வி மறுப்பு. நீட் என்ற கொள்கையைச் சட்டமாக கொண்டிருக்கும் மத்திய அரசு, அதைத் தடுக்க பலமில்லாத மாநில அரசு, இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாம், இவர்கள் தான் இதை நிகழ்த்தியவர்கள் என்று வேதனையுடன் ட்வீட் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.