அண்மைகாலமாகச் சமூகவலைத்தளங்களில் மீ டூ எனும் தலைப்பில் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களையும், கொடுமைகளையும் பகிர்ந்து வருவது பரவலாகக் கவனத்தைப் பெற்று வருகிறது. குறிப்பாக, சில முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற திரைப்படப் பிடிப்பில் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஹிந்தி நடிகர் நானா படேகருக்கு எதிராக பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா காவல்துறையிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு இந்த விவகாரத்தில் பல நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவித்தனர். சட்ட ரீதியாக நானா படேகருக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பலர் கேள்வியெழுப்பினர்.
இந்நிலையில் தனுஸ்ரீ தத்தா அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்திய மும்பை காவல்துறை, நானா படேகர் மீதான குற்றச்சாட்டுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி வழக்கு தொடர்பான பி அறிக்கையை மும்பை அந்தேரி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
இதையடுத்து மும்பை காவல்துறையின் அறிக்கை மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தனுஸ்ரீ தத்தா தரப்பு முடிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.