முகப்பு
செய்திகள்

ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கும் தி அயர்ன் லேடி பட நிலவரம் குறித்து இயக்குநர் விளக்கம்!

படத்தில் உள்ள இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள...

Updated On : 4 நவம்பர், 2019 at 4:07 PM
பகிர்:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த பிரியதர்ஷினி இயக்குகிறார். கடந்த டிசம்பர் மாதம், ஜெயலலிதா நினைவு நாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காதது ஏன் என்பதற்கு இயக்குநர் பிரியதர்ஷினி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

தி அயர்ன் லேடி படத்தின் இயக்குநராக உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்.  இங்கே விவாதிக்கப்பட்ட சில உண்மைகளை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம் என்றாலும், சமீபத்தில் என்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் விரிவாக பதிலளிக்க அவற்றை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன்.  

தி அயர்ன் லேடி திரைப்படம் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அம்மா செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின்  முழு வாழ்க்கைக் கதையையும் உள்ளடக்கியது. உண்மைக் கதாபாத்திரம் கோரும் வெவ்வேறு அம்சங்களைக் கவனமாக பட்டியலிட்ட பிறகு, நித்யா மேனனை அம்மாவின் கதாபாத்திரத்திற்கான சரியான நடிகராகத் தேர்வு செய்தேன்.  அம்மா அவர்களைப் போல முக அமைப்பு  முதல் நிகர் இல்லா ஆளுமை திறன் வரை  நித்யா மேனன் இயற்கையாகவே அம்மா அவர்களின் பண்புகளையும் உள்ளடக்கியிருக்கிறார்.  நமது அம்மா புரட்சி தலைவி அவர்களைப் போலவே தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவர், சிறு வயது முதலே பரதநாட்டியம் மற்றும் ஆடல் கலை அறிந்தவர் மற்றும் இசையிலும் நேர்த்தியான திறன் கொண்டவர்.
  
ஒரு வாழ்க்கை வரலாற்றின் மிகவும் சவாலான அம்சம் அதைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகும். வாழ்கை வரலாற்றுப் படங்களில் பொதுவாக அதிகச் சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமரிசனங்கள் இருந்தாலும் அதன் நிஜத் தன்மையில் இருந்து மாறாமல் மக்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுகொண்டு இருக்கிறேன். இந்தக் களத்தில் ஒரு இயக்குனரின் முன் முன்வைக்கப்படும் சவால்கள் அதிகம். மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ள கூடிய, ரசிக்கக்கூடிய வகையில் ஒரு தரமான படைப்பைக் கொடுக்கக் கடமைபட்டு இருக்கிறேன். சர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ அவர்கள் காந்தி வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார்.  ஒரு சிறந்த வாழ்க்கை வரலாற்றுப் படம் மிகச் சிறந்த படைப்பாக அமைய அதற்கான சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது இதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

Advertisement

இந்தக் களத்தில்  50 சதவீத வெற்றி சரியான கதாபாத்திரத்தைத் தேர்வு செய்வதில் இருக்கிறது. இதில் எந்த நிலையிலும் சமரசம் செய்ய இயலாது. அப்படிச் செய்தால் நீங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் என்பதை அறிந்து இருக்கிறோம். மேலும் உண்மை நிலையில் இருந்து மாறாமல், படைப்பாற்றல் சுதந்தரத்தோடு உங்கள் முன் வைக்க எண்ணுகிறோம். படத்தில் உள்ள இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்களின் தேதிகளுக்காகவும் அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சரியான நேரத்திற்காகவும் காத்துக்கொண்டு இருக்கிறேன். இதனை அறியும்போது சுவாரசியயமாகவும் உற்சாகமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.