முகப்பு
செய்திகள்

சிக்கல்கள் தீர்ந்தன: சங்கத் தமிழன் படம் இன்று வெளியானது!

Updated On : 16 நவம்பர், 2019 at 11:29 AM
பகிர்:

நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்ட விஜய் சேதுபதி நடித்த சங்கத் தமிழன் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. பணப்பிரச்னையால் மாலைக்காட்சி வரை வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். 

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத் தமிழன். விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

தமிழகம் முழுக்க சங்கத் தமிழன் படம் நேற்று காலைக் காட்சி முதல் மாலைக் காட்சி வரை வெளியாகவில்லை. இதற்கு முன்பு வெளியான படங்கள் தொடர்பான கடன் பிரச்னைகள் தொடர்ந்து நீடித்ததால் திட்டமிட்டபடி நேற்று இரவுக்காட்சி வரை சங்கத் தமிழன் படம் வெளியாகவில்லை. இதனால் படத்துக்கு முன்பதிவு செய்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். மேலும், சங்கத் தமிழன் படத்தை திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் ஒரு வாரத்துக்கு வெளியிட திருநெல்வேலி நீதிமன்றம் தடை விதித்தது. 

Advertisement

விஜய் சேதுபதி நடித்த படத்தின் வெளியீடு தாமதமாவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு விஜய் சேதுபதி நடித்த 96, சிந்துபாத் படங்களும் வெளியீட்டின் போது இதுபோன்ற தாமதங்களை எதிர்கொண்டது. இந்நிலையில் மற்றுமொரு விஜய் சேதுபதி படத்துக்கு அதேபோன்றதொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

ஒருவழியாக, நேற்று மாலையில் பணப்பிரச்னைகள் தீர்க்கப்பட்டதால் சென்னையில் மட்டும் இரவுக்காட்சி வெளியிடப்பட்டது. விருகம்பாக்கத்தில் உள்ள ஐனாக்ஸ் மற்றும் சில திரையரங்குகளில் நேற்றிரவு சங்கத் தமிழன் படம் வெளியானது. இதையடுத்து இன்று முதல் உலகமெங்கும் சங்கத் தமிழன் படம் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.