செய்திகள்

ராம், ஜானு தேடல்! தொடரும் 96 ஓராண்டு நினைவலைகள்!

தினமணி

அக்டோபர் 4-ம் தேதி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 96. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான இத்திரைப்படத்துக்கு ரசிகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் வெளியாகி ஒரு வருடம் கடந்த நிலையில், படத்தைப் பற்றி மீண்டும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் எழுதி வருகின்றனர்.

ஒரு படம் பலரின் பழைய நினைவுகளை மீட்டெடுத்ததுவிட்டது என்றால் காதல் எனும் உன்னதமான உணர்வுதான் காரணமாக இருக்க முடியும். காதலில் எத்தனையோ வகைகள் உண்டு, கண்டதும் காதல், நேரில் காணாமலேயே காதல் (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்), க்ரஷ் இப்படி இந்தக் காலத்தில் காதலில் பல்வேறு கிளைகள் தோன்றிவிட்டன. ஆனால் '90 kids’ என அழைக்கப்படும் இளைஞர்களுக்கு எல்லாம் காதல் என்றால் அது ஒன்றுதான். அது காவியக் காதல். காதல் எனும் அழகான உணர்வு அவர்கள் மனதில் ஆயிரம் வயலின்களை இசைக்க வைக்கும். நேசித்த பெண்ணின் ஒற்றைச் சிரிப்புக்காக தவம் கிடந்தவர்கள் அவர்கள். காதலில் மிதந்தபடி கனவுகள் சுமந்தபடி அவர்களின் வாழ்க்கை இனிதே பயணித்தது. காதலிக்கும் பெண்ணிடம் எப்படியாவது தன் மனதில் உள்ளதை சொல்லிவிட துடித்து, வாய்ப்புக்காக இதயம் முரளி போல காத்திருப்பார்கள். காதலை வெளிப்படுத்துவதிலேயே அத்தனை சிக்கல் இருந்தது அவர்களுக்கு. நிராகரிக்கப்படும் பயத்தில் அவர்கள் காதலை மனத்துக்குள் பொத்தி வைத்திருந்தனர்.

காதல் என்பது ஆதி உணர்வு. காதலிக்கும் நபரிடம் வார்த்தைகளில் வெளிப்படுத்திதான் சொல்ல வேண்டும் என்பதில்லை. அவர்களின் கண்கள் பேசும், உடல்மொழி  மொத்தமும் அறிவித்துவிடும். நேசத்தின் பாதையில் துளிர்விடும் காதல் பூக்களுக்கு பேச்சுக்கள் என்பது அனாவசியம்தான். மனம் மனத்திடம் பேசிவிட்ட போது உதடுகள் உச்சரிக்கத்தான் வேண்டுமா என்ன? ஆத்மார்த்தமான தான் காதலிக்கும் பெண்ணிடம் மனதில் உள்ளதை கூறவேண்டும் என்பதில்லை. அந்தப் பேரன்பு எவ்வகையிலாவது அவர்களின் ஆழ்மனதுக்குள் சென்றுவிடும்.

96 படத்தில் கதாநாயகனான ராமுக்கு காதலியை மீண்டும் வெகுகாலம் கழித்து கண்டபின்பு தனக்கான வாய்ப்புகள் எல்லாம் இருந்தும் உடல் தாண்டிய பிரியத்துக்கும் காதலுக்கும்தான் தன்னை ஒப்புக் கொடுத்துவிடுகிறான். காதலித்த பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதைவிட சிறந்த ஆண்மையென எதைச் சொல்லிவிட முடியும். ஆண்மை என்பது வீரம் இல்லை. ஆண் என்ற திமிரும் அல்ல. அது மதித்தலில் உள்ளது. தான் காதலிக்கும் பெண்ணின் சுயத்தை மதித்து அவளுடைய தற்போதைய மனநிலையை அறிந்து ஓரடி தள்ளி நிற்பவன்தான் சிறந்த ஆண்மகன். அவ்வகையில் ராம் ஜானுவிடம் வைத்திருந்தது இளம் வயதில் தோன்றக்கூடிய ஈர்ப்பு அல்ல, மாறாக அவ்வுணர்வு அவன் ஆன்மாவில் உறைந்து அவனுள் ஒரு பகுதியாகவே மாறிவிட்ட உண்மைக் காதல். காதலுக்கு கண்ணில்லை என்கிறார்கள். ஆனால் இதயம் நிறைய உள்ளது என்று மீண்டும் நிரூபித்த 96 படம் காதலர்களின் மகுடம் எனலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT