செய்திகள்

மக்களின் கஷ்டத்தைக் கண்டு மனம் உடைந்துள்ளேன்: ரூ. 3 கோடி வழங்கியதைத் தொடர்ந்து மேலும் நிதியுதவி அளிக்க ராகவா லாரன்ஸ் திட்டம்

ரூ. 3 கோடி வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து மேலும் நிதியுதவி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்...

எழில்

கரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி வழங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து மேலும் நிதியுதவி செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 7,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்புப் பணிகளுக்காக நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் ரூ. 3 கோடி வழங்குவதாக அறிவித்தார். இதுபற்றி ராகவலா லாரன்ஸ் தெரிவித்ததாவது: சந்திரமுகி 2 படத்துக்காக சன் டிவி எனக்கு வழங்கிய முன்தொகையிலிருந்து ரூ. 3 கோடி கரோனா நிவாரண நிதிக்காக வழங்குகிறேன். அதில் ரூ. 50 லட்சத்தை பிரதமர் பொது நிவாரண நிதிக்கும் ரூ. 50 லட்சத்தை தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கும் ரூ. 50 லட்சத்தை பெப்சி திரைப்படத் தொழிலாளர் அமைப்புக்கும் வழங்குகிறேன். மேலும் ரூ. 50 லட்சத்தை நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கும் ரூ. 25 லட்சத்தை எனது மாற்றுத்திறனாளிகளுக்கும் ரூ. 75 லட்சத்தை அன்றாடப் பணியாளர்கள் மற்றும் எனது பகுதியான ராயபுரம் தேசியநகரில் உள்ள ஏழைகளுக்கும் வழங்குகிறேன் என்று கூறினார்.

கரோனா நிவாரண நிதிக்குப் பிரபல தமிழ் நடிகர்கள் பலரும் இதுவரை நிதியுதவி அளித்துள்ளார்கள். அவர்களில் ராகவா லாரன்ஸ் தான் அதிகபட்ச தொகையை அளித்துள்ளார் என்று அறியப்படுகிறது.

இதையடுத்து, தற்போதைய நிலைமையில் எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது என்பதால் மேலும் நிதியுதவி அளிக்க முடிவெடுத்துள்ளார் நடிகர் லாரன்ஸ். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:

ரூ. 3 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்தபிறகு மேலும் சில கோரிக்கைகள் வந்துள்ளன. சண்டைக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் எனப் பல தரப்பினரும் உதவி கோரியுள்ளார்கள். மக்களிடமிருந்து கடிதங்களும் விடியோக்களும் வந்துள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது இதயம் உடைந்துபோகிறது. என்னால் இதற்கு மேலும் உதவி செய்ய முடியாது என்பதால் எனக்கு வரும் போன் அழைப்புகளுக்கு நான் பிஸியாக உள்ளதாகப் பதில் அளிக்கும்படி உதவியாளர்களிடம் கூறினேன். ஆனால் அப்படிச் சொன்னதற்கு மிகவும் வருந்தினேன்.

என்னால் நேற்றிரவு தூங்க முடியவில்லை. விடியோக்களில் பார்த்த மக்களின் அழுகை என்னை மிகவும் சொந்தரவு செய்தது. பிறகுதான் நினைத்தேன், வரும்போது எதுவும் கொண்டுவரவில்லை, போகும்போதும் எதுவும் கொண்டு செல்லப்போவதில்லை. இப்போது எல்லாக் கோயில்களும் மூடப்பட்டுள்ளன. பசியால் வாடும், இச்சூழலில் அவதிப்படும் மக்களிடம் தான் கடவுள் உள்ளார் என நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை கடவுளுக்கு அளித்தால் அது மக்களிடம் சேராது. ஆனால் மக்களுக்கு அளித்தால் அது கடவுளைச் சென்று சேரும். ஏனெனில் கடவுள் எல்லோரிடமும் உள்ளார். சேவை செய்யவே கடவுள் எனக்கு வேலை அளித்துள்ளார். இந்தக் கடினமான நேரம் தான் சேவை செய்வதற்கான சரியான நேரம். எனவே மக்களுக்கும் அரசுக்கும் என்னாலான உதவிகளைச் செய்ய முடிவெடுத்துள்ளேன். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதை என் நண்பர்கள், ஆடிட்டரிடம் ஆலோசனை செய்து ஏப்ரல் 14 அன்று அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தலைநகா் இப்போது வேகமான, உள்ளடக்கிய வளா்ச்சியை நோக்கி மாற்றத்தைக் காண்கிறது: அமைச்சா் கபில் மிஸ்ரா

வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

SCROLL FOR NEXT