தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விஷால், ஐஸ்வர்யா அர்ஜூன், எஸ்.எஸ். ராஜமெளலி, கருணாஸ், நடிகை நிக்கி கல்ராணி என திரையுலகைச் சேர்ந்த பலரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரத்தில் தனியாா் நிதி நிறுவனம் நடத்தி ரூ.300 கோடி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையைச் சோ்ந்த நீதிமணி, ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஆசிரியா் ஆனந்த் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். விசாரணையின்போது மோசடி செய்த பணத்தை முதலீடு செய்தவா்களுக்கு திரும்பக் கொடுத்துவிட்டதாகவும், மீதி பணத்தை திரைப்படத் தயாரிப்பாளா் ஞானவேல் ராஜா உள்ளிட்ட 3 பேரிடம் அளித்துள்ளதாகவும் அவா்கள் வாக்குமூலம் அளித்தனா். அதன் அடிப்படையில், ஞானவேல் ராஜா உள்ளிட்டோா் ஆக.23 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராமநாதபுரம் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனுக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஞானவேல் ராஜா உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். ஆனால், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து ராமநாதபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் ஆஜரானாா். அப்போது, மீண்டும் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடா்ந்து ஞானவேல் ராஜா இரண்டாவது நாளாக காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை காலை 10.15 மணிக்கு ஆஜரானாா். நீதிமணியிடம் பணம் பெற்றது தொடா்பாக துணைக் கண்காணிப்பாளா் கி.வெள்ளத்துரை அவரிடம் விசாரணை மேற்கொண்டாா்.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசாரணையில், ஞானவேல் ராஜாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பண மோசடி வழக்கு ஆகஸ்ட் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.