செய்திகள்

காதலுக்கும் நாடகக் காதலுக்கு  உள்ள வித்தியாசம் இதுதான்: ‘திரெளபதி’ படம் பார்த்த பிறகு எச். ராஜா சொன்ன பதில்!

எழில்

ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி. இயக்கியுள்ள படம் - திரெளபதி. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாடகக் காதல் குறித்து படத்தின் மையக்கதை உருவாக்கப்பட்டுள்ளதால் டிரெய்லரில் உள்ள பல வசனங்கள் சமூகவலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்கியுள்ளது. இன்று வெளியாகியுள்ள திரௌபதி படத்தைத் தடைசெய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதனால் இந்தப் படம் வார இறுதியில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரெளபதி படம் பார்த்தபிறகு செய்தியாளர்களிடம் பாஜக தேசிய செயலா் எச். ராஜா கூறியதாவது:

திரெளபதி படம் நீண்ட நாளைக்குப் பிறகு குடும்பத்துடன் அதுவும் பெற்றோர்கள் தங்களுடைய வயதுக்கு வந்த மகளோடு பார்க்கவேண்டிய நல்ல திரைப்படம் இது. எத்தனை பெண் குழந்தைகள் நாடகக் காதலால் ஏமாற்றப்படுகிறார்கள், அந்தக் குழந்தை குழந்தையாக இருக்கும்போது மடியில் போட்டு வளர்த்த பெற்றோர்களிடமிருந்து அந்தக் குழந்தைகள் பாலுணர்வு வக்கிரத்தால் ஈர்க்கப்பட்டு, சமூக சீர்கேடுகள் நிறைந்திருக்கிற ஒரு சூழ்நிலையில், சமூகத்தைச் சீர்படுத்துகிற ஒரு திரைப்படமாக இந்தப் படத்தைப் பார்க்கிறேன். டிரெய்லர் வந்த பிறகு இந்தப் படம் பற்றி வந்த புகார்கள், எழுப்பப்பட்ட கருத்துகள் எதுவுமே அடிப்படையில்லாதவை என்பது இந்தப் படத்தைப் பார்க்கும்போது தெரிகிறது. சமூகச் சீர்த்திருத்தக் கருத்துகளை, வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் எல்லாம் பெற்றோர்களின் முக்கியத்துவத்தை உணர்கின்ற விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண் குழந்தையும் திரெளபதியாக வாழவேண்டும், சில பேருக்கு திரெளபதி என்கிற பேரைக் கேட்டாலே பயம் வரலாம். இந்தப் படத்தை எடுத்த இயக்குநர் உள்ளிட்ட அனைவருமே பாராட்டுக்கு உரியவர்கள் என்றார்.

எச். ராஜாவிடம் ரஜினி பற்றி நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றபோது, இல்லையில்லை... இந்தப் படம் பற்றி மட்டும்தான் பேசுவேன் என்றார். பிறகு நிருபர்களின் கேள்விக்கு எச். ராஜா கூறியதாவது:

இந்தப் படம் யாரையும் தாக்கவில்லை. எந்தச் சமுதாயத்தின் பேரையும் சொல்லவில்லை. குற்ற உணர்வு இருந்து அதற்காக யாராவது வருத்தப்பட்டால், அதைத் தவிர்க்க முடியாது. அதைப் பற்றி நாம் கவலைப்படவில்லை.

காதல் என்பது வாழ்க்கையில் நிலைத்த பிறகு, தானே காம உணர்வுக்கு ஆட்படாமல் செய்துகொண்டால் அது காதல். இதே தமிழ்நாட்டில் கல்கி சதாசிவம் எம்.எஸ். சுப்புலட்சுமியைத் திருமணம் செய்துகொண்டார். அன்று யாரும் குற்றம் சொல்லவில்லை. ஆணவக்கொலை வரவில்லை.  இதுதான் காதலுக்கும் நாடகக் காதலுக்கும் உள்ள வித்தியாசம். கிட்டப்பாவுக்கும் கேபி சுந்தராம்பாளுக்கும் திருமணம் நடந்தது. காதல். முதிர்ச்சியுற்றவர்கள் அறிவு பெற்று அதற்குப் பிறகு சேர்ந்து வாழ முடிவு செய்து எடுத்த முடிவுக்குப் பெயர் காதல். மற்றது காமம். அதைப் பயன்படுத்தி சமுதாயத்தில் பணம் பறிக்கிற மாபியா கும்பல் இல்லை என்று யாரும் சொல்லமுடியாது. 

இந்தப் படம் பற்றிய பதிவுகள் என்னுடைய சமூகவலைத்தளப் பக்கங்களில் தொடர்ந்து வரும். இரண்டு பெண் குழந்தைகளின் தகப்பன் நான். அவர்கள் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக உள்ளார்கள். அதேபோல எல்லாக் குடும்பங்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். ஒவ்வொரு பெண் குழந்தையும் திரெளபதியாக வாழவேண்டும் என்று பேட்டியளித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT