முகப்பு
செய்திகள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தயாரிக்கிறாரா?

கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதால் அதுவே ரஜினி நடிக்கும் கடைசிப் படம், அதற்குப் பிறகு அவர் அரசியலுக்குள் நுழைந்துவிடுவார் என்றும்...

Updated On : 25 ஜனவரி, 2020 at 11:38 AM
பகிர்:

சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இதுதான் தமிழ்த் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். தமிழ்த் திரையுலகில் இப்படியொரு படமும் கூட்டணியும் இதுவரை நிகழாததால் இது தொடர்பான புதிய தகவல்களை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளார்கள். 

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராக் அடுத்ததாக கைதி என்கிற படத்தை இயக்கி அதை சூப்பர் ஹிட்டாக்கியதால் அவருக்குத் தமிழ்த் திரையுலகில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதற்கடுத்து ரஜினி நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. 

Advertisement

சமீபத்தில் கடாரம் கொண்டான் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் அடுத்ததாக 83 என்கிற ஹிந்திப் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. அடுத்ததாக, ரஜினி - லோகேஷ் இணையும் படத்தை கமல் தயாரிக்கிறார் என்பதுதான் அடுத்தக்கட்டத் தகவல். 

கமல் தயாரிப்பில் ரஜினி நடிப்பதால் அதுவே ரஜினி நடிக்கும் கடைசிப் படம், அதற்குப் பிறகு அவர் அரசியலுக்குள் நுழைந்துவிடுவார் என்றும் அறியப்படுகிறது. 

சமீபத்தில் நடைபெற்ற ஜீ சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜுக்கு விருது வழங்கினார் கமல். அப்போது பேசிய லோகேஷ், நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லை. ஆனால் கமலின் அனைத்துப் படங்களையும் நான் பார்த்துள்ளேன். அவருடைய படங்கள் தான் கைதி படத்தை இயக்க எனக்கு ஊக்கமாக இருந்தது என்றார். பிறகு பேசிய கமல், என்னுடைய படங்கள் லோகேஷுக்கு ஊக்கமாக இருந்ததில் மகிழ்ச்சி. அப்படிப் பார்க்கும்போது நானும் கைதி படத்தின் இயக்குநர் தான். அவரைப் பற்றி இன்னும் சொல்லலாம். என்றாலும் அதை வேறொரு தருணத்தில் கூறுகிறேன் என்றார். இதனால் கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் ஒரு படம் இயக்கவுள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தப் படத்தின் கதாநாயகனாக கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தை கமல் தயாரிக்கவுள்ளார் என்கிற அளவுக்கு இந்த விஷயம் அடுத்தக்கட்டத்துக்குச் சென்றுள்ளது. 

இதையடுத்து, ரஜினி - கமல் இணையும் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் நிஜமாகவே நடக்குமா என்கிற ஆவலில் உள்ளார்கள் தமிழ் ரசிகர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.