1 கிலோ மைசூர்பாகு, 2 1/2 கிலோ சிப்ஸ் பார்சல்: சென்னையில் இருந்து திரும்பும் கணவனுக்குக் கட்டளையிட்ட தீபிகா!
சென்னையில் இருந்து மைசூர்பாகு மற்றும் சிப்ஸ் வாங்கி வருமாறு ரன்வீர் சிங்க்குக்கு தீபிகா படுகோன் அன்புக் கட்டளை விடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் இருந்து மைசூர்பாகு மற்றும் சிப்ஸ் வாங்கி வருமாறு ரன்வீர் சிங்க்குக்கு தீபிகா படுகோன் அன்புக் கட்டளை விடுத்திருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி 1983 உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாகக் கொண்டு 83 என்கிற ஹிந்திப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் கபில் தேவாக ரன்வீர் சிங் நடிக்கிறார். தமிழக வீரர் ஸ்ரீகாந்தாக, ஜீவா நடிக்கிறார்.
இந்தப் படத்தைத் தமிழகத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக படக் குழு சென்னை வந்தது.
இதையடுத்து, சென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன்பு ரன்வீர் சிங், இந்தப் படம் குறித்த போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.
ஆனால், இது ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கவில்லை. இந்தப் பதிவின் கீழ் ரன்வீர் சிங்கின் மனைவி தீபிகா படுகோன் பதிவிட்டுள்ள கமெண்ட்தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அன்புக் கட்டளையாக தீபிகா பதிவிட்ட கமெண்ட்டில்,
"ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸில் இருந்து 1 கிலோ மைசூர் பாகு மற்றும் ஹாட் சிப்ஸ்ஸில் இருந்து காரமான உருளை சிப்ஸ் 2 1/2 கிலோ. இது இல்லாமல் திரும்ப வரவேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தீபிகாவின் இந்த கமெண்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.