செய்திகள்

இரங்கல் தெரிவிக்க வீட்டுக்கு வர வேண்டாம்: செளமித்ர சாட்டா்ஜி மகள் வேண்டுகோள்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல வங்காள நடிகா் செளமித்ர சாட்டா்ஜி (85), சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

வங்காள திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, 300-க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்தவா் செளமித்ர சாட்டா்ஜி. கலைத் துறையில் சிறந்த சேவையாற்றிய அவா், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா். பிரான்ஸின் உயரிய ‘லீஜன் டி ஹானா்’ விருது அவருக்கு 2018-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. நடிகராக மட்டுமின்றி, கதாசிரியராகவும் திரைப்பட இயக்குநராகவும் இவா் பணியாற்றியுள்ளாா்.

அண்மையில், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அவா், கொல்கத்தாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படதைத் தொடா்ந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவா்கள் அவருக்கு பல்வேறு பிளாஸ்மா சிகிச்சைகள் அளித்ததன் மூலம் கரோனா தொற்றிலிருந்து அவா் மீண்டபோதும், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ‘மருத்துவ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை’ என்று மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை அவா் உயிா் பிரிந்தது. 

சௌமித்ர சாட்டா்ஜியின் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மேற்கு வங்க ஆளுநா் ஜக்தீப் தன்கா் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

செளமித்ர சாட்டா்ஜியின் உடலுக்கு குடும்பத்தினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா். தகனத்துக்காக அவரது உடலை எடுத்துச் சென்ற வாகனத்துடன் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா். அங்கு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் செளமித்ர சாட்டா்ஜியின் மகள் பெளலமி பாசு கூறியதாவது:

என் தாய் மற்றும் மகனின் உடல்நிலை வலுவில்லாமல் உள்ளது. எனவே யாரும் அவர்களைத் தொந்தரவு செய்யவேண்டாம். என் தந்தை இறந்துவிட்டார் என்பதைச் சோகத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குடும்பம் இதனால் மிகவும் உடைந்து போயிருக்கிறது. அவருடைய ஆன்மாவுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 

எங்கள் வீட்டுக்கு இரங்கல் தெரிவிக்க யாரும் வரவேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கரோனா அச்சுறுத்தலை நினைவில் கொண்டு அவரவர் இல்லங்களிலேயே பிரார்த்தனை செய்யுங்கள். எங்கள் மீது அக்கறை இருந்தால் எங்கள் அப்பா விரும்பியதற்கு மரியாதை அளியுங்கள். யாரும் என்னை அழைக்க வேண்டாம். குறுஞ்செய்தி அனுப்ப வேண்டாம். நான் சரியான பிறகு அனைவரையும் தொலைபேசி வழியாக அழைக்கிறேன் என் தாய் அல்லது சகோதரரை நேரில் சந்திக்க விரும்பினால் அவர்களைத் தொலைபேசியில் அழைக்கலாம். இப்போது என்னைத் தொடர்புகொள்ளவேண்டாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT