இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுவோம்: கர்ணன் பட சர்ச்சை பற்றி உதயநிதி ஸ்டாலின்
கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது...
செய்திகள்இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுவோம்: கர்ணன் பட சர்ச்சை பற்றி உதயநிதி ஸ்டாலின்
கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது...
கர்ணன் பட சர்ச்சை பற்றி இத்துடன் விட்டுவிடுவோம் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது. கடந்த டிசம்பர் மாதம் கர்ணன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.
சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் கர்ணன் படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் கர்ணன் படத்தை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.
இரு தினங்களுக்கு முன்பு நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியதாவது: ‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன். 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி என்று கூறினார்.
இதையடுத்து 1997 என்பது 90களின் பிற்பகுதியில் எனப் படத்தில் மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும் மீண்டும் அதே அர்த்தம் தொனிப்பதால் இதற்கும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதியுள்ளார்கள். இதையடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கூறியதாவது:
கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர். படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் '90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்திக் குரல்கள் எழுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.