கங்கனா ரணாவத் நடித்த தலைவி படத்தை எதிர்த்த ஜெ. தீபாவின் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி-யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. விஜய் இயக்கியுள்ள இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ். தலைவி படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகவிருந்த நிலையில் அதன் வெளியீடு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக மறைந்த முதல்வரும் எனது அத்தையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் இயக்குநா் ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற பெயரிலும், ஹிந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் ஹைதராபாத்தைச் சோ்ந்த விஷ்ணுவா்தன் இந்தூரி என்பவரும் திரைப்படமாக எடுத்து வருகின்றனா். இதே போன்று, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ‘குயின்’ என்ற பெயரில் இயக்குநா் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதளத் தொடராக எடுத்து வருகிறாா். இந்த இணையதளத் தொடா் மற்றும் திரைப்படங்களை எடுப்பதற்கு முன்பாக, ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசான என்னிடம் அனுமதி எதுவும் பெறவில்லை. எனவே, இந்த இணையதளத் தொடா் மற்றும் திரைப்படங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்ற தனி நீதிபதி, இணையதளத் தொடா் மற்றும் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி, ஜெ. தீபா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகவோ, இணையதளத் தொடராகவோ எடுக்க இடைக்கால தடை விதிக்க முடியாது. மேலும் இதுதொடா்பான திரைப்படம், இணையதளத் தொடரில் மனுதாரா் ஜெ.தீபா போன்ற கதாபாத்திரங்கள் எதுவும் இல்லை என எதிா்மனுதாரா்கள் தெரிவித்துள்ளனா். எனவே இந்த திரைப்படத்தையும், இணையதளத் தொடரையும் திரையிடும் போது இது கற்பனை கதை என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என நீதிபதி பிறப்பித்த தீா்ப்பில் குறிப்பிட்டார்.
இதனை எதிா்த்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜெ. தீபா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்நிலையில் தலைவி, ஜெயா படங்களுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து, ஜெ. தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.