ஓடிடி தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.
ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என மாநிலங்களவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் சமீபத்தில் தெரிவித்தார். ஓடிடி தளங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக பல்வேறு யோசனைகள், புகார்கள் வரப்பெற்றுள்ளன. இதுதொடர்பான வழிகாட்டுதல்கள், உத்தரவுகள் ஏறக்குறைய தயாராகிவிட்டன; விரைவில் அமல்படுத்தப்படும் என்றார்.
திரைப்படங்கள், இணையத் தொடா்கள் ஆகியவை தணிக்கையின்றி ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. ஆகையால், டிஜிட்டல் ஊடகங்கள், ஓடிடி தளங்கள் போன்றவற்றில் வரும் நிகழ்ச்சிகளைக் கண்காணித்து மேலாண்மை செய்வதற்காக தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று வழக்குரைஞா்கள் சசாங்க் சேகா், அபூா்வா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு மீதான விசாரணையில் மத்திய அரசின் சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம். நடராஜ், ஓடிடி தளங்களை ஒழுங்குமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றாா். என்ன மாதிரியான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடா்பாக மத்திய அரசு ஆறு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா். ஏற்கெனவே நிலுவையில் உள்ள மற்றொரு வழக்குடன் சோ்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
இந்நிலையில் ஓடிடி தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர்களான ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓடிடி நிறுவனங்களுக்கு விதிமுறைகள் உருவாக்க வேண்டிய அவசியமாகிறது. நாட்டில் அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. அதற்கென்று சில வரைமுறைகள் உள்ளன. திரைப்படங்கள், இணையத் தொடர்களை வெளியிடும் ஓடிடி நிறுவனங்கள் யு/ஏ 13, யு/ஏ16+, ஏ சான்றிதழ் என வகைப்படுத்த வேண்டும். ஏ சான்றிதழ் பெற்ற படங்களைக் குழந்தைகள் பார்க்காமல் இருப்பதை உறுதிப்படுத்த ஓடிடி தளங்களில் சிறப்பு வசதி செய்து தரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.