இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் கங்கனா ரணாவத்
இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படமல்ல. ஆனால்...
தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அடுத்ததாக இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் தமிழ், ஹிந்தி மொழிகளில் தயாராகி வருகிறது. விஜய் இயக்கி வரும் இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.
இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் வேடத்தில் தான் நடிக்கவுள்ளதாக நடிகை கங்கனா ரணாவத் அறிவித்துள்ளார்.
நான் இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கும் அரசியல் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது. இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுப் படமல்ல. ஆனால் அரசியல் வரலாற்றுப் படம். பல முக்கியமான நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இந்திய அரசியலின் முக்கியமான தலைவரின் வேடத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். ஒரு புத்தகத்தின் அடிப்படையில் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்று இப்படம் குறித்து கங்கனா ரணாவத் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரிவால்வர் ராணி படத்தில் கங்கனாவுடன் இணைந்து பணியாற்றிய சாய் கபீர், இந்திரா காந்தி தொடர்பான இப்படத்தை இயக்கவுள்ளார்.