செய்திகள்

தற்போதைய தமிழ் சினிமாவின் அடையாளம் வெற்றிமாறன், ஏன் ?

எஸ். கார்த்திகேயன்

தமிழ் ரசிகர்கள் சற்று வித்தியாசமானவர்கள். நடிகர்களைக் கொண்டாடுவதைப் போல இயக்குநர்களையும் தொடர்ச்சியாகக் கொண்டாடி வந்திருக்கிறார்கள். ஸ்ரீதர், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், , மணிரத்னம் என அந்த வரிசை நீளும்.

இந்த வரிசையில் தவிர்க்க முடியாதவராக, தற்போதைய தமிழ் சினிமாவின் முகமாக மாறியிருக்கிறார் வெற்றிமாறன். இன்று (செப்டம்பர் 4) வெற்றிமாறனின் பிறந்த நாள். ஜனரஞ்சகமான படங்களை எளிதாக எடுத்துவிடலாம். ஆனால், ஒரு கலைப்படைப்பை அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி எடுப்பது மிகக் கடினம்.

வெற்றிமாறன் இயக்குநராக அறிமுகமான 'பொல்லாதவன்' வெளியாகி 14 ஆண்டுகளாகின்றன. இந்த 14 ஆண்டுகளில் வெற்றிமாறன் எடுத்தது வெறும் 5 படங்கள். அவர் எடுக்கும் ஒவ்வொரு படத்துக்குப் பின்னாலும் அசாதாரணமான உழைப்பு இருக்கிறது. 

'அசுரன்' தவிர்த்து, ஒரு படத்துக்கு குறைந்தது 2 முதல் 3 ஆண்டுகள் வரை முன் தயாரிப்புப் பணிகளுக்காக மட்டும் எடுத்துக்கொள்கிறார். ஒரு களத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தக் களம் குறித்து ஆராய்ந்து, அதில் ரத்தமும் சதையுமாக மனிதர்களை உலவவிடுவதனால்தான் அவரது படங்கள் உண்மைக்கு நெருக்கமாக இருக்கின்றன. விருதுகளையும் குவிக்கின்றன.  தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் 6 தேசிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். 

மேலும் இயக்குநர் மகேந்திரனுக்குப் பிறகு இலக்கியப் படைப்புகளைப் படமாக எடுத்து வெற்றிபெற்றவர் வெற்றிமாறன். லாக்கப் என்ற நாவலை 'விசாரணை'யாகவும், வெக்கை என்ற நாவலை அசுரனாகவும் திரைக் காவியங்களாக்கியுள்ளார்.

ஜெயமோகனின் 'துணைவன்' சிறுகதையைத் தற்போது 'விடுதலை' என்ற பெயரில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாக்கி வருகிறார். இதனையடுத்து அவர் சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் 'வாடிவாசல்' திரைப்படமும் சி.சு. செல்லப்பாவின் வாடிவாசல் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டதே. 

இப்படி பெயரிலேயே வெற்றி இருக்கும் வெற்றிமாறனின் வெற்றிக்கு அவர் நாவல்களைப் படமாக்குவதும் ஒரு காரணம். ஓர் இயக்குநருக்கு முதல் ஓரிரு படங்களில் அவரது வாழ்நாள் அனுபவங்கள் கைகொடுக்கும். ஆனால் அதற்கு பிறகு அவர்கள் தங்கள் படத்துக்கான கதைக்களத்தை வெளியில் இருந்தே எடுத்தாக வேண்டும். அல்லது தங்களைப் புதுப்பித்துக்கொள்வது அவசியம். 

அப்படி ஒருவர் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள இலக்கியங்கள் பெரிதும் உதவுகின்றன. ஆனால் எல்லா இலக்கியப் படைப்புகளும் திரைப்படமாக்க முடியாது. 

மேலும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு வரும் ஏதோவொரு வகையில் நமக்கு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள். அதன் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். இந்த இரண்டு விஷயங்கள்தான் வெற்றிமாறனின் பலம். தான் சந்தித்த மனிதர்கள் கூறிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டுதான் பொல்லாதவன், வட சென்னை படங்களை  உருவாக்கியதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

ஒரு படத்தின் முன்கட்ட தயாரிப்பு பணிகளுக்கும், இறுதிக்கட்டப் பணிகளுக்கும் அவர் கொடுக்கும் முக்கியத்துவம்தான் அவரது படங்கள் நேர்த்தியாக உருவாகக் காரணம். பெரும்பாலான இயக்குநர்கள் படத்தின் இசை, ஒலிக்கலவை, படத்தொகுப்பு ஆகியவற்றின் இறுதி முடிவை அந்தந்த இசைக் கலைஞர்களிடம் விட்டுவிடுவர். ஆனால், வெற்றிமாறன் ஒவ்வொரு பணியின்போதும் உடன் இருந்து தனது படத்துக்கான சிறப்பானவற்றைப் பெறுவார். 

தொடர் வெற்றி குறித்து வெற்றிமாறன் குறிப்பிடும்போது, ''பெரிய, பெரிய இயக்குநர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் ஏதோவொரு காலகட்டத்தில் தொடர் வெற்றிகளை கொடுத்திருப்பர். அதற்குப் பிறகு அவர்களின் கலையுலக வாழ்க்கையில் இறங்குமுகம் இருக்கும். எனக்கும் அப்படித்தான் நடக்கிறது. இது எவ்வளவு நாள் எனத் தெரியாது. அது என் கையில் இல்லை. நான் செய்ய வேண்டியதெல்லாம் சிறப்பான படங்களை உருவாக்குவதுதான்" என்கிறார். இந்த புரிதல்தான் வெற்றிமாறனின் வெற்றிக்கு காரணம். 

இயக்குநர் வெற்றிமாறனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT