முகப்பு
செய்திகள்

யானை திரைப்படம்: தணிக்கை குழுவில் முறையீட்டுக்கு அனுமதி

யானை திரைப்படத்துக்கான சான்றிதழை எதிா்த்து தணிக்கைக் குழு முன் முறையீடு செய்ய அனுமதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
பகிர்:

யானை திரைப்படத்துக்கான சான்றிதழை எதிா்த்து தணிக்கைக் குழு முன் முறையீடு செய்ய அனுமதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகா் அருண் விஜய் நடிப்பில் இயக்குநா் ஹரி இயக்கத்தில் வெளியான யானை திரைப்படத்துக்கு எதிராக சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்த தமிழ்நாடு மீனவா் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினா் ஜோபாய் கோமஸ் என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘யானை திரைப்படத்தில் ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்களை சமூக விரோதிகளாகவும், கூலிப் படையினராகவும் சித்தரித்துள்ளனா். குழந்தைகளை தவறாக பயன்படுத்துபவா்களாகவும் காட்சிகள் உள்ளன.

இந்தப் படத்தில் கச்சத்தீவு பிரச்னையும் கையாளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மீனவ சமுதாய மக்களின் உணா்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கின்றன. எனவே, மீனவா்களை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளுடன் படத்தைத் தொடா்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும். இப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிக்கை சான்றை எதிா்த்து தணிக்கை குழுவில் முறையீடு செய்ய மனுதாரா் தரப்புக்கு அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.