செய்திகள்

பரத்துக்கு இந்தக் காதல் கைகொடுத்ததா? லவ் - திரை விமர்சனம்

சிவசங்கர்


மலையாளத்தில் ஷைன் டாம் சாக்கோ, ரஜிஷா விஜயன் நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றத் திரைப்படம் லவ். இப்படத்தின் தமிழ் ரீமேக்கில்  பரத், வாணி போஜன் நடித்துள்ளனர். 

சுயதொழில் செய்து நஷ்டமடைந்த நாயகன் அஜய்யை (பரத்) திருமண வரனுக்காக சந்திக்கிறார் திவ்யா (வாணி போஜன்). இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால், வாணியின் தந்தைக்கு (ராதா ரவி) அஜய் மீது பெரிய மதிப்பு இல்லை. இருப்பினும், அஜய்யை நம்புவதாகக் கூறி திருமணம் செய்துகொள்கிறார் திவ்யா. 

மணவாழ்க்கை சரியாகச் சென்றுகொண்டிருக்கிறது. பின், ஓராண்டு கழித்து மருத்துவமனைக்குச் செல்லும் நாயகி கர்ப்பம் அடைந்திருப்பது உறுதியாகிறது. இதனை தன் கணவனுக்குச் சொல்லலாம் என வீட்டுக்கு வருகிறார். ஆனால், வீட்டில் தொழிலில் தோற்று எந்நேரமும் குடித்துக்கொண்டு விடியோ கேம் விளையாடும் தன் கணவன் மீது எரிச்சல் கொள்பவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அஜய் அமைதியாக இருந்தாலும் சண்டை அதிகமாகி ஒருகட்டத்தில் தன் மனைவியைக் கொல்கிறார். 

தொடர்ந்து, மனைவியின் சடலத்தை கழிவறையில் மறைத்து வைப்பதுடன் எப்படி இந்த உடலை வெளியே எடுத்துச் செல்வது எனத் தீவிரமாக யோசிக்கிறார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அஜய்யின் நண்பர்  (விவேக் பிரசன்னா)  வீட்டிற்கு வருகிறார். முதலில் நாயகன் பயந்தாலும் பின் நிதானமாக தன் நண்பனை அணுகி என்ன பிரச்னை எனக் கேட்கிறார். நண்பன் ‘தொழில் நஷ்டத்தில் இருக்கிறேன். எல்லாம் போயிருச்சு. என் மனைவிக்கும் என் பங்குதாரனுக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்கிறார். 

நண்பனை எப்படியாவது வெளியே அனுப்ப வேண்டும் எனத் திட்டமிட்டாலும் அதற்குள் இன்னொரு நண்பரும் வருகிறார். குழப்பங்களுடன் போராடும் நாயகன் இறுதியில் இவர்களைச் சமாளித்து சடலத்தை வெளியே கொண்டு வருகிறாரா? வந்த நண்பர்களெல்லாம் யார்? என்கிற கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் மெல்ல மெல்ல திரைக்கதை முடிச்சுகள் அவிழ்ந்து, சைக்கோ திரில்லர் பாணியில் மீதிக்கதை நோக்கி நகர்கின்றன. 

பாய்ஸ் படத்தில் அறிமுகமான பரத் அடுத்தடுத்து கதையம்சமுள்ள படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைத் தக்கவைத்தார். குறிப்பாக, ’காதல்’, ’எம் மகன்’, ‘வெயில்’ ஆகியவை அவருக்கு நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றுத்தந்தன. ஆனால், கதைத் தேர்வில் சரியாக கவனம் செலுத்தாததால் சில ஆண்டுகளிலேயே தன் மார்க்கெட்டுடன் தன் ரசிகர்களையும் சரசரவென இழக்க ஆரம்பித்தார்.

இறுதியாக 2019 ஆம் ஆண்டு வெளியான ‘காளிதாஸ்’ படம் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த ஒரே வெற்றிப்படமாக இருந்தது.

இது அவரின் 50-வது படமென்பதால் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்பதற்காக ரீமேக்கில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கலாம். ஆனால், 20 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் நாயகனுக்கு ஏற்ற கதாபாத்திர வலு இல்லாமல் வெற்றியை மட்டுமே இழக்காக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். 

மலையாள ‘லவ்’ படத்தின் மையத்தை உள்வாங்கிய இயக்குநர் ஒளிப்பதிவு, பின்னணி இசை, நடிப்பு என சில இடங்களில் நல்ல வேலை வாங்கியிருப்பது தெரிகிறது. முக்கியமாக, அஜய் - திவ்யா சண்டைக்காட்சியை ஸ்லோமோஷனாக காட்சிப்படுத்தியது சிறப்பு. தமிழுக்கு ஏற்றதுப்போன்ற வசன மாற்றங்கள் பெரிதாக கதையை சிதைக்கவில்லை. 

பரத், வாணி போஜனின் நடிப்பு கணவன் - மனைவிக்குள் நிகழும் சண்டைகளை அப்பட்டமாக வெளிப்படுத்துவதுபோல் எதார்த்தமாக இருக்கின்றன. விவேக் பிரசன்னா, டேனியல் ஆகியோரின் நடிப்பும் ஓரளவு கைகொடுத்திருக்கிறது. 

ஆனால், மலையாள மூலத்தின் தொடக்கக் காட்சிக்கு பதிலாக தமிழுக்கு ஏற்றதுபோல நாயகன் - நாயகி காதல் காட்சிகளை வலுக்கட்டாயமாக இயக்குநர் திணித்திருக்கிறார். நேரடியாக கதைக்குள் சென்றாலே பார்க்கக் கூடியதற்கு ரசிகர்கள் தயாராகிவிட்ட காலத்தில் இன்னும் எதற்காக இந்த கமர்சியல்தனம்?

ரீமேக் படங்களில் கதாபாத்திரத் தேர்வு என்பது மிக முக்கியமானது. மலையாளத்தில் நண்பர்களாக வரும் கோகுலன், சுதி கோப்பா ஆகிய இருவரும் வேறுவேறு மனநிலைகளில் கச்சிதமாக பொருந்தியிருப்பார்கள். தமிழில் விவேக் பிரசன்னா, டேனியல் கதாபாத்திரம் அந்த அளவிற்கு ஈர்க்கவில்லை. ஒரே வீட்டில் நடக்கும் கதை என்பதால் அதன் பரபரப்பு சில இடங்களில் குறைவது பெரிய பலவீனம்.

மலையாளத்தில் பார்க்காதவர்கள் கிளைமேக்ஸ் டுவிஸ்ட்க்காக இப்படத்தைக் காணலாம். மற்றபடி.. பரத் வருங்காலத்தில் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டியதை உணர்ந்து கொள்வாரா என்பதை இந்த ‘லவ்’ முடிவு செய்யும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிசயம் நடக்கும், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவோம்: ஷுப்மன் கில்

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

SCROLL FOR NEXT