ஆஸ்கர் குழுவால் தீபிகா படுகோனுக்கு கிடைத்த அங்கீகாரம்!
95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கவுள்ளார்.
95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தொகுத்து வழங்கவுள்ளார். ஆஸ்கர் தொகுப்பாளர்கள் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா படுகோன் பகிர்ந்துள்ளார்.
திரைத்துறையில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது. 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியில் மார்ச் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலுமிருந்து சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், ஆஸ்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்களின் பட்டியலை ஆஸ்கர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தீபிகா படுகோன் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தீபிகா படுகோனுடன், ரிஸ் அகமது, எமிலி பிலன்ட், ட்வானே ஜான்சன் உள்ளிட்ட பல பிரபலங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடுவர்களில் ஒருவராகவும் தீபிகா படுகோன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் நாட்டு கூத்து பாடல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு ஆவணப்படங்களும் ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் உள்ளது. இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குவது கூடுதல் அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.