செய்திகள்

முடிவுக்கு வந்த அயோத்தி திரைப்பட பிரச்னை

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படத்தின் கதை திருட்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. 

DIN

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படத்தின் கதை திருட்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. 

அயோத்தியிலிருந்து  இராமேஸ்வரம் வருகிற வடநாட்டு குடும்பத்தினரை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆனால்,  இந்தக் கதை தான் எழுதிய கதை என்றும் திருடப்பட்டு, படமாக்கப்பட்டிருப்பதாகவும்  முகநூலில் எழுத்தாளர் மாதவராஜ் குற்றம் சாட்டியிருந்தார்.

ஆனால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனோ மாதவராஜ் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாதவராஜ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தன்னை நேரில் சந்தித்தாக குறிப்பிட்டுள்ள அவர் இப்பிரச்னை இத்துடன் முடிவுக்கு வருவதாக அறிவித்துள்ளார். 

அவர் தனது பதிவில், நேற்று அயோத்தி படத்தின் இயக்குனர் தரப்பிலிருந்து என்னுடன் நேரில் பேச விரும்புவதாக தெரிவிக்கப்பட்டது. இன்று சென்னையில், சாஸ்திரி பவனில் , டெபுடி லேபர் கமிஷனர் முன்பு எனது கிராஜுவிட்டி வழக்கு குறித்த ஹியரிங் இருப்பதால், நான் சென்னைக்கு வர இருப்பதாக தெரிவித்தேன்.

இன்று காலை என்னை படக்குழுவின் சார்பில் தொடர்பு கொண்டனர். படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குனர் மந்திரமூர்த்தி, துணை இயக்குனர் ஸ்ரீதர் ஆகியோருடன் சந்திப்பு நடந்தது. என்னுடன் வழக்கு சம்பந்தமாக வந்திருந்த - எங்கள் வங்கியில் பணிபுரிந்த - தொழிற்சங்கப் பொறுப்புகளில் இருந்த - தோழர் விஸ்வநாதன் இருந்தார்.

நடந்த விஷயங்களை இரு தரப்பிலும் பகிர்ந்து கொண்டோம். தயாரிப்பாளர் மிகுந்த புரிதலோடு பேசியது சந்திப்பை அர்த்தமுள்ளதாகவும், இணக்கமானதாகவும் ஆக்கியது. இந்தப் படம் முக்கியமான, அவசியமான படம் என்று எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.

இந்தப் படத்திற்காக கடும் உழைப்பை செலுத்தியதை, களப்பணி ஆற்றியதை இயக்குனர் மந்திரமூர்த்தி விவரித்தார். 

இயக்குனர் மந்திரமூர்த்தியிடம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கொடுத்த கதை, நான் 2011ல் தீராத பக்கங்களிலும், Bank Workers Unity பத்திரிக்கையிலும் எழுதிய பதிவிலிருந்து எடுத்து எழுதப்பட்ட கதை என்பது தெரிய வந்தது.

அயோத்தி படம்  OTT தளத்தில் வெளியாகும்போது, நிஜத்தில்  பாதிக்கப்பட்ட வட இந்தியக் குடும்பத்திற்கு உதவிய பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், அதன் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ் பாபு ஆகிய இருவருக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

அதற்கான ஏற்பாடுகளை செய்து  அவர்களுக்கான அங்கீகாரத்தை அளிப்பதாக நம்பிக்கையளிக்கப்பட்டது. தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கும், இயக்குனர் மந்திரமூர்த்திக்கும் எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டேன். இந்த பிரச்சினையில்  ஆதரவளித்த, துணை நின்ற அத்தனை பேருக்கும் நன்றி. பார்ப்போம். நம்பிக்கைகள் நனவாக வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT