நடிகர் ஆர்.எஸ். சிவாஜி காலமானார்
பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று(சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 66.
பிரபல திரைப்பட நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவால் இன்று(சனிக்கிழமை) காலமானார். அவருக்கு வயது 66.
ஆர்.எஸ். சிவாஜி 1981 ஆம் ஆண்டு வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அபூர்வ சகோதர்கள் படத்தில் இவர் பேசிய 'எங்கேயோ போய்ட்டீங்க சார்' என்ற வசனம் மிகவும் பிரபலம். அதன்பின்னர் குணா, பம்மல் கே சம்மந்தம், அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன் என கமல் படங்களில் அதிகம் நடித்துள்ளார்.
நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்றவர். மேலும் இவர் உதவி இயக்குநராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார்.
2018ல் நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்திருந்தார். அதுபோல, 2021ல் வெளியான சாய் பல்லவியின் ‘கார்கி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டையும் பெற்றார். நேற்று(வெள்ளிக்கிழமை) திரையரங்குகளில் வெளியான யோகி பாபுவின் 'லக்கி மேன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.
உடல்நலக்குறைவால் அவர் இன்று காலை உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவர் இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.