செய்திகள்

வழக்கமான காட்சிகளால் தடுமாறி நிற்கிறதா டீமன்? திரைவிமர்சனம்

கி.ராம்குமார்

இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் நடிகர்கள் சச்சின், அபர்ணநதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள திரைப்படம் டீமன். தில்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்ததை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள டீமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?

தமிழ் சினிமாவில் பேய்க் கதைகள் மக்களிடையே அதிகம் புழங்கியதாலோ என்னவோ அக்கதைகளில் வரும் காட்சிகளை வித்தியாசமாக அமைக்க வேண்டிய பொறுப்பு இயல்பாகவே இயக்குநருக்கு ஏற்பட்டு விடுகிறது. திரைப்பட இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன் எனும் சச்சின் ஒரு பேய்க் கதையை உருவாக்கி அதற்கு தயாரிப்பாளரிடமும் ஒப்புதல் பெற்று திரைப்படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தனது திரைக்கதை உருவாக்கத்திற்காக தனியே ஒரு அப்பார்ட்மெண்ட்டில் குடிபுகும் நடிகர் சச்சினுக்கு இரவு நேரங்களில் தூக்கத்தில் மரணிப்பது போன்ற கனவுகள் தொடர்கின்றன. ஒரு கட்டத்தில் உறக்கமின்மையால் தவிக்கும் சச்சின் தனது இல்லத்தில் பேய்கள் இருப்பதை அறிகிறார். அந்தப் பேய்களிடமிருந்து தப்பித்தாரா? அவரது திரைப்படம் என்ன ஆனது? என்பதுதான் டீமன் திரைப்படத்தின் கதை. 

அறிமுக நடிகராக தோன்றியிருக்கும் நடிகர் சச்சினின் உழைப்பு நன்றாக வந்திருக்கிறது. சராசரி இளைஞனான சச்சின் பேய்களால் துன்பப்படும் இடங்களில் நேர்மையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். நடிகை அபர்ணநதி எதற்காக படத்தில் இருக்கிறார் என்பதை சல்லடை போட்டும்கூட கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு பாடலுக்கு வருகிறார். சில இடங்களில் காதல் காட்சிகளுக்கு வருகிறார். அதற்கு பிறகு ஒட்டுமொத்த திரைப்படத்திலும் அவரை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. சச்சினின் நண்பர்களாக வரும் நடிகர்களும் நாடகத்தன்மையான நடிப்பையே கொடுத்திருக்கின்றனர். அவர்களின் ஒவ்வொரு வசனமும், நடிப்பும் செயற்கைத்தன்மை நிறைந்ததாக இருந்தது அப்பட்டமாக காட்சிகளில் தெரிவது சலிப்பை ஏற்படுத்துகிறது. 

முன்பே குறிப்பிட்டதைப் போல பேய்ப் படம் என்றாலே ரசிகர்கள் யூகிக்கும் காட்சிகள் படம் முழுக்க நிறைந்து கிடப்பது படத்தின் மீதான ஆர்வத்தைக் கெடுக்கிறது. சச்சின்  கொல்லப்படுவதாக வரும் காட்சிகள் கனவு என திரையில் காட்சி விரிவதற்கு முன்பாகவே பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடும் அளவிற்கா திரைப்படத்தை எடுப்பது? முதல்பாதி முழுக்க ஒரு வட்டத்திற்குள் சுழலும் திரைக்கதையால் கதாநாயகன் இறந்துவிட்டாலே போதும் என நினைக்கும் அளவிற்கு இழுவைக் காட்சிகளாக இருக்கின்றன.

ஒருவழியாக இரண்டாம் பாதியில் கதைக்குள் வந்தாலும் அதிலும் சிக்கித் தவிக்கின்றன லாஜிக்குகள். ஏற்கெனவே அந்த அப்பார்ட்மெண்ட்டில் இரண்டு குடும்பங்கள் இறந்ததாக செய்திகள் வரும் நிலையில் சச்சினிடம் மட்டும் பேய்கள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருப்பது ஏன்? அப்பார்ட்மெண்ட் செயலாளர் 3 பெட் ரூமாக அதே அப்பார்ட்மெண்ட்டை வைத்துக் கொள்ளுங்கள் என பேய் இருப்பதைக் குறிப்பிட்டு கதாநாயகனுக்கு சலுகை தருகிறார். மரண பயம் இருக்கும் யாராவது மீண்டும் அதே வீட்டிற்குள் திரும்பச் செல்வாரா? முதல்பாதியில் வயோதிக தோற்றத்தால் கதாநாயகன் பயந்து ஓடுவதாகக் காட்டிவிட்டு இரண்டாம் பாதியில் அதற்கு காரணமும் தெரிவிக்காமல் கைவிட்டு விட்டார் இயக்குநர். 

ஒருவழியாக திரைப்படத்தை இயக்குவதாக கதாநாயகன் காட்டப்பட்ட பின்பும் அவர் எப்படி தப்பித்தார் எனக் காட்டியே ஆவேன் என அடம்பிடித்த இயக்குநர் அதற்காக பேய்களிடம் அவரை பேச்சுவார்த்தை நடத்த விட்டதெல்லாம் அடுக்குமா? தொழில்நுட்பரீதியாக பெரும்பாலும் ஒரே இடத்தில் நடக்கும் காட்சி என்பதால் கூடுமானவரை அயர்ச்சி ஏற்படுத்தாத வண்ணம் செயல்பட்டிருக்கிறது கேமரா. பின்னணி இசையைத் தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தியிருக்கலாம். பிளாஷ்பேக் காட்சிகளுக்காக செய்யப்பட்டுள்ள கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக வந்திருக்கின்றன. 

வழக்கமான கதையில் ஏதாவது புதிய விஷயத்தைக் கொடுத்திருந்தால்கூட ரசிக்கும்படியாக இருந்திருக்கும் டீமன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

SCROLL FOR NEXT