செய்திகள்

சித்தார்த் தன்னை நிரூபித்துக் கொண்டாரா? சித்தா - திரை விமர்சனம்

கி.ராம்குமார்

நடிகர்கள் சித்தார்த், நிமிசா ஷஜயன் நடிப்பில் வெளிவந்திருக்கிறது சித்தா திரைப்படம். சிந்துபாத், பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண்குமார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். வழக்கமாக தந்தை-மகள் பாசம் குறித்த திரைப்படங்கள் அவ்வப்போது வெளிவரும் சூழலில் ஒரு சித்தப்பாவிற்கும், மகளுக்கும் இடையேயான உறவை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் சித்தா திரைப்படம் எப்படி இருக்கிறது? 

பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம். உறவுகளுக்கிடையேயான காதலை அழகாகக் காட்டிய அத்திரைப்படத்தின் இயக்குநர் அருண்குமார் சித்தாவிலும் தனக்கு பலமான அதே சூத்திரத்தைத் தேர்வு செய்திருக்கிறார். 

தனது அண்ணனின் இறப்புக்குப் பிறகு அவரின் குழந்தையை சித்தப்பாவாகிய சித்தார்த் பாசத்துடன் கவனித்துக் கொள்கிறார். அண்ணனின் குழந்தை சுந்தரிக்கு தந்தையின் இழப்பு தெரியாதவாறு ஒரு நண்பனாகவும் அவர் நடந்து கொண்டு அவரை வளர்க்கிறார். இதற்கிடையில் ஒருநாள் குழந்தை சுந்தரி காணாமல் போகிறார். அதேநேரத்தில் உடுமலைப்பேட்டை அருகே ஒரு குழந்தையின் சடலம் கிடைக்கிறது. குழந்தை சுந்தரி என்ன ஆனார்? சித்தா வருவார் என காத்திருந்த குழந்தையின் நம்பிக்கையைக் காப்பாற்றினாரா சித்தப்பா சித்தார்த்? என்பதே திரைப்படத்தின் கதை. 

குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை மையப்படுத்தி வந்திருக்கும் சித்தா உண்மையில் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நடிகர் சித்தார்த்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இத்திரைப்படம் இருக்கும். குழந்தைக்கு அவர் காட்டும் பாசத்திற்காக அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு சித்தார்த் ஒரு அசாத்தியக் கலைஞன் எனும் பார்வையை ஏற்படுத்துவதாக உள்ளது. குழந்தைக்காக வளர்க்க அவர் காட்டும் அக்கறை, தன் மீதான பழிக்கு வருந்தி உருகுவது, தொலைந்துபோன தனது அண்ணனின் குழந்தையை மீட்க பாடுபடுவது, குற்றவாளியைப் பழிவாங்கத் துடிப்பது என கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் சித்தார்த்.

நடிகை நிமிஷா சஜயன் தமிழில் அறிமுகமாகியிருக்கிறார். தூய்மைப் பணியாளராக அவர் சித்தார்த் மீது காதல் கொள்ளும் இடங்கள் ரசனைமிகுந்ததாக இருக்கின்றன. சித்தார்த்தை திருத்த அவர் பேசும் வசனங்கள் படத்தின் வீரியத்தைப் பார்வையாளர்களுக்கு கடத்துகின்றன. சுந்தரியாகவும், பொன்னியாகவும் நடித்த இரண்டு குழந்தைகள் எப்படி இவ்வளவு யதார்த்தமாக  நடித்தனர் என்பது ஆச்சர்யமாக உள்ளது. தேர்ந்த நடிகர்களை மிஞ்சிய அவர்களின் நடிப்பு படத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

இவர்களைத் தவிர சித்தார்த்தின் நண்பன் கதாபாத்திரம், காவல் ஆய்வாளராக வரும் பெண், வில்லன், தாய் அஞ்சலி நாயர் என சரியான கதாபாத்திரத் தேர்வு படத்திற்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருக்கின்றன. படத்தின் பலமே இந்தக் கதாபாத்திரங்களின் தேர்வுதான் எனலாம்.

வலிமையான திரைக்கதை உருவாக்கம் காரணமாக காட்சிகள் எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தவில்லை. ஒரு திரைப்படத்திற்கு எழுத்து எந்தளவு முக்கியம் என்பதை இந்தமாதிரியான திரைப்படங்கள் உணர்த்துகின்றன. குழந்தைகள் ஏமாற்றப்படும் விதம், உறவுகளுக்கிடையேயான பாசம், வெறும் பேச்சாக மட்டும் அக்கறை காட்டும் காவல்துறை, முன்பின் தெரியாதவரின் உதவி, பாலியல் வன்கொடுமைகளின் பாதிப்பு என பல பரிமாணங்களைக் கடத்தியிருக்கிறது இயக்குநரின் எழுத்து.

குழந்தை சுந்தரியிடம் அவரது தாய் பேசும் இடத்தில் சித்தார்த் கலங்கி நிற்கும் காட்சி தொடங்கி, காவல்துறை செக்போஸ்ட்டில் ஒரு பெண்மணி குழந்தைக்காக மேற்கொள்ளும் துணிச்சலான செயல் என உணர்வுக்கு நெருக்கமான காட்சிகள் கலங்கவைக்கின்றன. நண்பனின் மாமாவை தாக்கியதற்காக மன்னிப்பு கேட்கும் இடங்கள் நட்பின் யதார்த்தத்தைக் கடத்தியிருக்கிறது. ”ஒரு பஸ்ஸுக்குள்ள ஏறி இறங்குனாலே பொண்ணுங்க சங்கடப்பட்டுத்தான் இறங்க வேண்டி இருக்கு. ஆனா எல்லா ஆம்பளையும் தன்னை உத்தமன்னு சொல்லிக்கறான்”, “உனக்கு என்ன வேணும்னு தான் இப்பவும் நீ பாக்கற..அந்தக் குழந்தைக்கு என்ன வேணும்னு நீ யோசிக்கல” போன்ற வசனத்தை கைதட்டல் பெறுகின்றன. 

பழனியை அதன் அழகியலுடனே நமக்கு தந்திருக்கிறார் கேமரா கண்களின் சொந்தக்காரர் பாலாஜி சுப்பிரமணியம். படத்தை நாடகத்தன்மையில் இருந்து காப்பாற்றியதில் கேமரா கலக்கியிருக்கிறது. பின்னணி இசை படத்தின் ஆகப்பெரும் பலம். உணர்வுப்பூர்வமான படம் என்பதால் கிடைக்கும் இடங்களில் எல்லாம் இசையை இட்டு நிரப்பாமல் தேவை அறிந்து செயல்பட்டு படத்தைக் கைதூக்கிவிட்டிருக்கிறார் விஷால் சந்திரசேகரும், திபு நினன் தாமஸும். சந்தோஷ் நாராயணனின் குரலும், யுகபாரதியின் பாடல் வரிகளும் வழக்கம் போல் அருமை.   

சில காட்சிகளை தீவிரமாகக் கொண்டு சென்றிருக்க வாய்ப்பிருந்தும் அதை இயக்குநர் தவிர்த்திருக்கிறார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெரும்பாலும் சொந்த உறவினர்களாலேயே நடக்கிறது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில் குற்றவாளியை வெளியில் தேடும் சித்தார்த் தொடுதல் குறித்த விழிப்புணர்வுக்காக கவலைப்படுவது அதன் முக்கியத்துவத்தைக் குறைப்பதாக இருக்கிறது. காட்சியின் அவசியத்திற்காக என்றாலும் அதை இன்னும் கவனமுடன் காட்சிப்படுத்தியிருக்கலாம். பாலியல் குற்றங்களைத் தடுக்க இயக்குநர் முன்வைக்கும் தீர்வும் விவாதத்திற்குரிய ஒன்று. சின்னச் சின்ன லாஜிக் குறைகள், மேம்போக்கான சில காட்சிகள் ஆகியவை தவிர்க்கக்கூடிய குறைகளாக இருக்கின்றன. 

சித்தா - சித்தார்த்துக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவிற்கும் மறக்கமுடியாத நல்ல சினிமா 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT