பொய்யான மருத்துவத் தகவல்களை பரப்புகிறேனா? சமந்தாவின் பதில்!
சமந்தாவின் சிகிச்சை முறைகள்: சமூக வலைதளங்களில் வலுக்கும் விவாதம்
நடிகை சமந்தா, மையோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது சிகிச்சை முறை குறித்த தகவல்களை அவ்வவ்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
சுவாச தொற்றிலிருந்து காக்கும் சிகிச்சையாக ஹைட்ரஜன் பெராக்ஸைட் நெபுலைசர் பயன்படுத்துவது குறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவுக்கு மறுப்பாக டாக்டர் சிரியாக் ஏபி பிலிப்ஸ் (தி லிவர் டாக்டர் என அறியப்படுபவர்) நடிகை சமந்தா மருத்துவ கல்வியறிவற்றவர் என விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக விளக்கமான பதிவொன்றை சமந்தா வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், டாக்டர் சிரியாக் பேசிய வார்த்தைகளில் கடுமை இல்லாதிருந்தால் அது இரக்க உணர்வு கொண்டதாக இருந்திருக்கும். குறிப்பாக என்னை சிறையில் தள்ள வேண்டும் என வலியுறுத்தியது குறித்து நான் பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. பிரபலமாக இருப்பதால் எதிர்கொள்ள வேண்டியது. நான் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஒருவராகவே பதிவிட்டேன், பிரபலமாக அல்ல.
என்னை வைத்து பேசிக் கொண்டிருப்பதற்கு பதிலாக எனது மருத்துவருடன் அவர் உரையாற்றுவது பொருத்தமாக இருக்கும். இரு மருத்துவர்களுக்கு இடையேயான விவாதத்தின் மூலம் நான் கற்றுக்கொள்வதை விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சிரியாக், சுவாச தொற்றிலிருந்து காக்கும் வகையில் ஹைட்ரஜன் பெராக்ஸைட் உள்ளிழுப்பானை பயன்படுத்துவதற்கு லட்சக்கணக்கான மக்களுக்கு நடிகை சமந்தா பரிந்துரைக்கிறார். அவர் மருத்துவம் மற்றும் அறிவியலில் கல்வியறிவற்றவராக இருப்பது துரதிர்ஷடவசமானது என எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்ததுக்கு சமந்தா இப்போது எதிர்வினையாற்றியுள்ளார்.
ஓராண்டுக்கு மேலாக சிகிச்சையின் காரணமாக படங்களில் நடிக்காமல் இருந்த சமந்தா தற்போது ‘சிடாடெல்’ ஹாலிவுட் தொடருக்காக தயாராகிவருகிறார்.