ஆச்சரியமூட்டும் கருடன் முதல்நாள் வசூல்!
நடிகர் சூரி நடித்துள்ள கருடன் திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்து தகவல் வெளியானது.
நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்தான் கருடன்.
துரை செந்தில்குமார் இயக்கிய இப்படம், நேற்று (மே.31) திரையரங்குகளில் வெளியானது. தேனி மாவட்ட வட்டாரத்தில் நிகழும் கதையாக உருவான இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக, சூரியின் நடிப்பும் சண்டைக்காட்சிகளும் பேசப்படுகின்றன.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் முதல்நாள் ரூ.4 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வரவேற்பு சூரியின் படத்திற்குக் கிடைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெளியாகும் திரைப்படங்கள் ஏமாற்றத்தை அளித்து வரும் நிலையில், கருடன் பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.